சமூகநீதி பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதிய "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்" என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நூலினை திமுக தலைவர் ஸ்டாவின் வெளியிட முதல் பிரதியை கழக கொள்கைப்பரப்பு செயலாளர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார். விழாவில் சிறப்புரையாற்றிய ஆ.ராசா திருக்குறள் தொடர்பாகவும், தமிழர் மதம், இனம், சமயம் தொடர்பாகவும் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இப்போது திருக்குறள் சர்ச்சை நடந்து முடிந்த நிலையில் ஐயனார் தொடர்பாக புத்தகத்தை திமுக தலைவர் வெளியிடுகிறார் என்ற சர்ச்சையை கூட எழுப்பலாம். எனக்கு பின்னால் உள்ள புகைப்படத்தில் பெரியார் இருக்கிறார், அண்ணா இருக்கிறார், தலைவர் கலைஞர் இருக்கிறார். அவர்களை வைத்துக்கொண்டு இந்த புத்தகத்தை வெளியிடுகிறோம். எங்களுக்கு தெரிந்து இந்த சமூகத்தில் இரண்டு புரட்சியாளர்கள் இருந்தார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒன்று 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர். மற்றொருவர் பெரியார். அந்த பெரியார் இயக்கத்தில் இருந்து வந்த பேராசிரியர் புத்தர் காலத்தில், சமணர் காலத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு மதம் இருந்தது, அது எந்த கடவுளையும் சார்ந்தது அல்ல என்று ஆய்வு செய்து கூறியிருக்கிறார். பெரியார் உயிரோடு இருந்தால் இப்படி இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே என்று கூட நினைக்கக் கூடும். எனெனில் அந்த மதம் ஜாதியை ஏற்றுக்கொள்ளவில்லை, வருணத்தை ஆதரிக்கவில்லை, சமூக ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான ஒன்று.
மற்றொன்று இன்று தமிழர்களுக்கு என்று ஏன் மதம் இல்லை. இந்து மதம் தமிழர்களுக்கானதா? இல்லை. வேறு ஏதேனும் மதங்கள் தமிழர்களுக்கானதா? இல்லை. இன்றைக்கு சொல்கிறார்கள் திருவள்ளுவரை பற்றி சொல்லும் போது அவர் இந்து மதமா? என்று. அதைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை. தொல்காப்பியத்திலேயே சிவன் இல்லை. எந்த ஒரு அந்நிய மதம் இங்கே வரும்போதும் ஒரு மொழிச்சிதைவு நடந்தே வந்திருக்கிறது என்பது உண்மை. வடவர்கள் வந்தார்கள் இங்கே இந்தி வந்தது, ஆங்கிலேயர் வந்தார்கள் ஆங்கிலம் வந்தது, பிரெஞ்சுகாரர்கள் வந்தார்கள் பிரெஞ்ச் வந்தது. மராட்டியர்கள் வந்தார்கள், மராட்டியம் வந்தது. ஒரு மதம் இங்கே வரும்போது தமிழ் சிதைக்கப்பட்டுள்ளது, அல்லது சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. அதை பற்றிய முழு விளக்கமும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதனை படிக்கும்போது தமிழகத்தின் பழமையான வரலாற்று தகவல்களை நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் அரிய பொக்கிஷமாக இந்த நூலை கருத வேண்டி இருக்கிறது" என்றார்.