Skip to main content

கொரியா ஒற்றுமையை நிராகரித்த அமெரிக்கா! கொரியாவின் கதை #11

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
korea story 11



1905ஆம் ஆண்டுவரை கொரியாவை பாதுகாக்கும் நாடாக ரஷ்யா இருந்தது. அந்த ஆண்டு ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடந்த யுத்தத்தை தொடர்ந்து கொரியா ஜப்பான் கைக்கு மாறியது.

1910 ஆம் ஆண்டுக்குள் ஜப்பான் தந்திரங்களைப் பயன்படுத்தி, கொரியாவை முழுமையாக தனது பிரதேசமாக இணைத்துக் கொண்டது. பேரரசியைக் கொன்று, பேரரசர் கோஜோங்கையும் பதவியிலிருந்து நீக்கியது.

ஜப்பானின் பிடியில் கொரியா பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கொரியா மக்கள் ஜப்பானியரின் அடிமைகளாக மாற்றப்பட்டனர். ஜப்பானுக்காக உழைக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். ஜப்பான் ஆதிக்கத்தை எதிர்த்து தேசியவாத குழுக்களும், புரட்சிகர குழுக்களும் விடுதலைப் போராட்டத்தை நடத்தின. இந்த விடுதலை இயக்கங்கள், கொரியாவுக்குள் இயங்க முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்தே போராடின. கொரியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் தனித்தனியாக போராடினார்கள். வெவ்வேறு நோக்கங்களை மையமாக வைத்து போராடினார்கள். தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போராடினர்.

 

 


சீனாவில் கொரியா தேசிய அரசாங்கத்தை அமைத்தார்கள். ஜப்பானுக்கு பயந்து இந்த அரசாங்கத்தை யாரும் அங்கீகரிக்கவில்லை. ஜப்பானின் ராணுவ தொழிற்சாலைகளிலும், ராணுவத்திலும் கொரியாவின் ஆண்களும் பெண்களும் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் எவ்வளவு வேகமாக ஜப்பான் தனது எல்லையை விரிவுபடுத்தியதோ, அதே வேகத்தில் தோல்வியின் விளிம்புக்கு விரட்டப்பட்டது. சீனாவில் சியாங்கே சேக்கும் மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஜப்பான் ராணுவத்தை விரட்டியடித்தன.
 

 

japan in korea



இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானின் தோல்வி உறுதியான நிலையில் எகிப்து தலைநகரில் கூட்டுப்படைகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். அப்போது, ஜப்பான் கைப்பற்றிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றவையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. கொரியாவைப் பொறுத்தமட்டில், அது அடிமைத்தனத்தில் இருப்பதால், நம்பகமான பொறுப்பாளர்களின் வசம் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், ரஷ்யா அதிபர் ஸ்டாலினிடம் யோசனை தெரிவித்தார். அந்த யோசனையை ஏற்ற ஸ்டாலின், இந்தப் பொறுப்பு மிகக் குறுகிய காலமே இருக்க வேண்டும் என்றார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக கூட்டுப்படைகளுக்கு இடையே குழப்பம் நிலவியது. அந்தப் பிரச்சனை முடிந்தவுடன், ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. உடனே, ஜப்பான் மீது சோவியத் யூனியனும் யுத்தம் அறிவித்தது.

 

 


கொரியாவின் வடபகுதிக்குள் ரஷ்யப் படைகள் அதிவேகமாக முன்னேறின. ரஷ்யாவின் வேகம் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டியது. கொரியா முழுவதையும் ரஷ்யா கைப்பற்றிவிடுமோ என்று பயந்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இரண்டு இளம் அதிகாரிகளை கொரியாவுக்கு அனுப்பியது. அவர்கள், கொரியாவில் அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை வரையறை செய்யும் வேலையை செய்தனர். குறைவான கால அவகாசத்தில் போதுமான தயாரிப்பு இல்லாத நிலையில் நேஷனல் ஜியாக்ரபி மேப்பை வைத்து 38 ஆவது நிலநேர்கோடை அளவாக கொண்டு கொரியாவை இரண்டாக பிரித்தார்கள். இந்த நிலநேர்கோடுதான் குறைந்தபட்சமாக கொரியாவை சரிபாதியாக பிரிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். இந்த நில நேர்கோடுக்கு கீழே தலைநகர் சியோல் இருக்கிறது. மேல்பகுதியில் பியாங் யாங் இருக்கிறது.

40 ஆண்டுகளுக்கு முன்பே, ஜப்பானும் ஜார் மன்னர் தலைமையிலான ரஷ்யாவும் இதே நேர்கோட்டை அளவாக வைத்து கொரியாவை இரு நாடுகளும் பிரித்துக் கொள்ள பேச்சு நடத்தியிருந்தன.

இந்த பிரிவினையால், அன்றைய நிலையில் ஒருகோடியே 60 லட்சம் கொரியா மக்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும், 90 லட்சம் மக்கள் சோவியத் ரஷ்யா கட்டுப்பாட்டிலும் வந்தார்கள். இந்த பிரிவினையை சோவியத் யூனியன் உடனடியாக ஒப்புக்கொண்டது. சோவியத் ரஷ்யாவின் செஞ்சேனை வடக்குப்பகுதியில் உள்ள பியாங்யாங் நகரை கைப்பற்றியது.

 

 

abe

அபே நொபுயுகி



அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியாவின் அதிகாரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. கொரியாவுக்கான ஜப்பானின் கவர்னர் ஜெனரலாக இருந்த அபே நொபுயுகி கொரியாவின் பல்வேறு விடுதலைக்குழுக்களின் தலைவர்களை தொடர்புகொண்டார். ஆகஸ்ட் இறுதியில் லியு வூன் ஹியுங் என்ற இடதுசாரித் தலைவர் தலைமையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரியா மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாஸ்கோவில் கூட்டுப்படை நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீன குடியரசு, பிரிட்டன் ஆகிய நாடுகள் கொரியாவை பாதுகாக்கும் ட்ரஸ்ட்டீஷிப் குழுவில் இடம்பெறுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தக் குழு கொரியாவின் விடுதலையை ஐந்து ஆண்டுகளில் முடிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைக்கப்பட்டது.

 

 


கொரியாவுக்கு உடனடியாக விடுதலை வேண்டும் என்று கொரியாவின் முக்கிய குழுக்கள் வற்புறுத்திய நிலையில், கொரியாவில் இயங்கிய கொரிய கம்யூனிஸ்ட் கட்சியோ இந்த இடைக்கால ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, 1946 முதல் 1947 வரை சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்த கமிஷன் அடிக்கடி கூடி, கொரியாவுக்கு ஒருங்கிணைந்த நிர்வாகத்தை முடிவு செய்வது குறி்தது பேச்சு நடத்தியது.

ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் பல்வேறு நாடுகளில் பனிப்போரில் ஈடுபட்டிருந்தன. அதே சமயம் கொரியாவில் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் அதிகரித்தன. கொரியாவை பாதுகாக்க அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாகவே ஒருங்கிணைந்த கொரியாவை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

 

 

singman rhee

சிங்மேன் ரீ



இதுதவிர, சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் கைப்பற்றியிருந்த வடக்கு மற்றும் தெற்கு கொரியா பகுதிகளில் கொள்கை வேறுபாடுகள் தீவிரமடைந்தன. 1946 ஆம் ஆண்டு மே மாதம் 38 ஆவது நில நேர்கோட்டை அனுமதி இன்றி தாண்டுவது சட்டவிரோதம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, இரண்டு பகுதிகளில் வசித்த கொரியா மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1947 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா சார்பில் அந்த நாட்டின் பிரதிநிதி டெரென்ட்டி ஷ்டிகோவ் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். கொரியாவிலிருந்து சோவியத் மற்றும் அமெரிக்க ராணுவம் வெளியேறிவிட்டு, கொரியா மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் யோசனை வெளியிட்டார். ஆனால், அந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்தது.

 

 


கொரியா முழுமையாக கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடும் என்று அமெரிக்கா பயந்தது. எனவே, கொரியாவிலிருந்து ராணுவத்தை வெளியேற்றும் கால அவகாசத்தை அமெரிக்கா மூன்றுமுறை தள்ளிப்போட்டது. 1947 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். துணை தளபதி ஹொட்ஜெ கொரியா விவகாரங்களை கவனிப்பார் என்று அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்சியான் விமானப்படைத் தளத்தில் ஹொட்ஜெ படையுடன் இறங்கினார். சீனாவிலிருந்து இயங்கிய கொரியா தேசிய அரசு ஹொட்ஜேவின் உதவிக்காக மூன்று மொழிபெயர்ப்பாளர்களை அனுப்பியது. அவர்களை ஹொட்ஜெ சந்திக்க மறுத்துவிட்டார். அதேபோல, ஜப்பான் கவர்னர் ஜெனரல் கொரியா விடுதலைக் குழுக்களின் தலைவர்களைக் கொண்டு அமைத்த கொரியா மக்கள் குடியரசையும் ஹொட்ஜே ஏற்க மறுத்தார். அந்த அரசு சட்டவிரோதமானது என்று டிசம்பர் 12 ஆம் தேதி அறிவித்தார்.

முன்னதாக செப்டம்பர் மாதம் ஹொட்ஜே தலைமையிலான ராணுவ அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சியை அமெரிக்க ராணுவம் முறியடித்தது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தலைவரான சிங்மேன் ரீ இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக அமெரிக்க ராணுவத்தால் நியமிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவில் தங்கியிருந்தவர். இவர்தான், கொரியாவை ஒருங்கிணைக்கும் முயற்சியை தடுத்தவர். தென்கொரியாவுக்கென தனி அரசாங்கத்தை அமைக்கும்படி அமெரிக்காவை வலியுறுத்தினார்.
 

 

hyung woon

லியு வூன் ஹியுங்



ஜப்பான் கவர்னர் ஜெனரல் அபே நொபுயுகியால் நியமிக்கப்பட்ட தற்காலிக கொரியா மக்கள் குடியரசின் தலைவரான லியு வூன் ஹியுங் இரண்டு கொரியாக்களின் இணைப்புக்காக வலது மற்றும் இடதுசாரி ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். இவரை வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி கொலை செய்தார். இது அமெரிக்காவின் சதி என்று கூறப்பட்டது. இதையடுத்து, தென்கொரியாவில் இயங்கிய இடதுசாரி ஆதரவாளர்களை கொன்றுகுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவ அரசு தீவிரப்படுத்தியது. அடுத்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இடதுசாரி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் பிடியில் இருந்த தென்கொரியாவில் அரசியல் நடவடிக்கை இப்படி இருந்தது என்றால், சோவியத் ரஷ்யாவின் பிடியில் இருந்த வடகொரியாவில் நிலைமை வேறு விதமாக இருந்தது.


முந்தைய பகுதி:

ஜப்பானின் சர்ச்சைக்குரிய போர்க்குற்றங்கள்! கொரியாவின் கதை #10