Skip to main content

இரட்டைமலை சீனிவாசன்... இருட்டடிக்கப்படும் வரலாறு!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

trs.jpg

 

இந்தியாவின் படிநிலைச் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் சமூக விடுதலைக்காக பௌத்த மதமாற்றத்தை பண்டிதர் அயோத்திதாசர் முன்னெடுத்தபோது, "நாம்தான் இந்துக்களே இல்லையே, பிறகு எப்படி மதம் மாறுவது?" என்று ஒலித்தது அந்தக் குரல். அதே காலகட்டத்தில் பட்டியலின மக்களை ஜாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்துவதை எதிர்த்து திராவிடர், ஆதித்தமிழர் போன்ற மாற்று சொல்லாடல்கள் முன்னிறுத்தப்பட்டபோது, "எந்தப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தினரோ, அந்தப் பெயரை வைத்தே உயர்வு பெற வேண்டும்" என்று சூளுரைத்தது அந்தக் குரல். ஆலய நுழைவு போராட்டம் என ஆங்காங்கே போராடியபோது, "ஒரு காலத்தில் நம் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. அப்படியிருக்கும்போது ஆலய நுழைவு எதற்கு" என எதிர்க்கேள்வி கேட்டது அதே குரல்... இத்தகைய புரட்சிகரமான மாற்றுச் சிந்தனைக்கு உரியவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். அயோத்திதாசரின் சக போராளி, காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர், வட்டமேஜை மாநாட்டில் பட்டியலின மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் சென்றவர், உதயசூரியன் சின்னத்தை திராவிட அரசியலின் அடையாளமாக்கிய முன்னோடி உள்ளிட்ட பெருமைகளுக்குரியவர் என்றபோதிலும் இன்றைய தமிழ்ச் சமூகம் அவரை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறது என்பதும் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறது என்பதும் கேள்விக்குறியே... கடந்த செப்டம்பர் 18, அவருடைய நினைவு நாள்.  தாத்தா இரட்டைமலை சீனிவாசனை குறித்து வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான சவிதா முனுசாமியுடனான சிறிய நேர்காணல்... 

 

 

இன்றைய தலைமுறைக்கு இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்.!?

 

வரலாற்றில் எங்கே, எதையெல்லாம் மறைத்து தாத்தாவின் பணிகளையும், புகழையும், தேவையையும் மறைத்தார்களோ அந்த வரலாறுகளைப் போதிப்பதோடு மட்டுமல்லாமல், அத்தகைய வரலாற்று இருட்டடிப்புக்குக் காரணமானவற்றை சொல்வதும் மிக முக்கியமான தேவை. தாத்தாவால் ஆரம்பிக்கப்பட்ட உதயசூரியன் பத்திரிகையின் இலச்சினையான இரண்டு மலைகளுக்கிடையில் சூரியன் உதிக்கும் ஓவியத்தையும் அதன் பெயரையும்தான் பின்னர் திமுக பயன்படுத்திக்கொண்டது. 1923இல் அன்றைய சென்னை மாகான அமைச்சரவையில் பஞ்சம பிரிவு மக்களை ஆதி திராவிடன் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அடிக்கோடிட்டு அந்த வரைவை உருவாக்கியவர் தாத்தா இரட்டைமலையார்தான்.

 

அடுத்து, பொருளாதாரத்தில், கல்வியில், அறிவில் வளர்ந்துவரும் பட்டியல் சமூக மக்களை ஒடுக்க 'பறையர் சாதிவெறி' என்றொரு வன்மத்தைக் கூறி, முற்போக்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சாதி இந்துக்கள் தங்களின் சாதிவெறி வன்மத்தைப் நாசூக்காக விதைக்கிறார்கள். அதை உடைக்கணும். மேலும், ஆங்கிலேயர்கள் பட்டியல் வகுப்பைச் சார்ந்த அனைவரையும் ஒரே சொல்லைக்கொண்டே குறிப்பிட்டார்கள், அது ‘பறையா’ - என்பதுதான் (அதில் எல்லா பட்டியல் உட்பிரிவைக் கொண்டவர்களும் அடங்குவர்.) பீமா கோரேகாவோன் போரில் பறையர் ரெஜிமெண்ட் என்ற மிலிட்டரி ஃபோர்ஸ் பங்கேற்ற வரலாறுகளெல்லாம் இங்குண்டு.

 

மேலும், ஆதிதிராவிடர்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் எழுந்த முதல் குரலே பெரியார் அவர்களுடையதுதான் என்று கட்டமைக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆதிதிராவிட சமுதாயத்தில் பல தலைவர்கள் இருந்துள்ளனர். ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுதப் புலவர், அயோத்திதாசப் பண்டிதர், வேம்புலி பண்டிதர், பெரியசாமி புலவர் போன்ற தமிழறிஞர்களும் ராஜேந்திரம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம், கோலார் ஜி அப்பாதுரையார், புதுவை ரா. கனகலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் பஞ்சமன், பறையன்திராவிடமித்திரன்திராவிட பாண்டியன்மகாவிடதூதன்ஆன்றோர்மித்திரன், தமிழன்இல்லற ஒழுக்கம் போன்ற பத்திரிகைகளும், அத்வைதானந்த சபை, சுபச்சார சங்கம், பறையர் மகாஜனசபை, பஞ்சம கல்விக் கழகம், திராவிட மகாஜன சங்கம் போன்று ஆதிதிராவிடர்கள் நிறுவிய அமைப்புகளும் முன்னோடியாக இங்கே இயங்கியிருப்பது பெரியார் போன்றவர்களுக்கே தெரிந்திருக்கும். மேற்காணும் அறிஞர்களெல்லாம் கோட்டு, சூட்டு, பூட்சு போட்டுக்கொண்டு உலக நாடுகள் முழுவதும் சுற்றிவந்தவர்கள். அவர்களுள் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கவர்தான் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்.

 

1928ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், மாநாட்டிற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கொடியில் வெறும் தியாகராயர், டி.எம். நாயர், பனகல் அரசர், தந்தை பெரியார் உருவத்தோடு சூரியன் எழுவதைப்போல மட்டுமே இருந்தது. ஆனால் இரண்டு மலைகளுக்கு இடையே சூரியன் உதயமாவதைப் போன்ற சின்னம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் ‘சென்னை மாகாண ஷெட்யூல்டு காஸ்ட் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பின் சின்னமாக உதயசூரியன் இருந்தது. தனது பெயரில் உள்ள இரட்டைமலையைக் குறிக்கும் விதமாக தான் ஆரம்பித்த இயக்கத்திற்கு இரட்டைமலையிலிருந்து சூரியன் உதயமாவதைப் போல தாத்தா வடிவமைத்திருந்தார். மேலும், இதன் கொள்கையை விளக்க ஜே.ஜே. தாஸ் ஆகியோருடன் இணைந்து 1941ஆம் ஆண்டு இதழ் ஒன்றையும் தாத்தா நடத்தியிருக்கிறார். அதன் பெயர்தான் உதயசூரியன். இந்த வரலாறுகளையெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை அதிகரித்துள்ளது

 

1890களிலேயே அயோத்திதாசப் பண்டிதருடன் இணைந்து ஆதிதிராவிட மகாஜன சங்கத்தைத் தோற்றுவித்த பெருமை தாத்தாவிற்கு உண்டு. நாங்கள்தான் உங்களுக்கு எங்களது ஆட்சியில் ஆதிதிராவிடர் என்ற பெயரை வைத்தோம், உங்களுக்கு நாங்கள்தான் எல்லாமும் செய்தோம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு தாத்தாவின் வரலாறுகளையும், எந்த சாதி  அடையாளத்தை வைத்து எம்மை ஒடுக்கினார்களோ அந்த அடையாளங்களை வைத்து நாம் பெற வேண்டிய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரவும், இடவொதுக்கீடு, வேலைவாய்ப்பு, ஆட்சியதிகாரம் ஆகியவற்றில் சமபங்கு கோரவும் அந்த அடையாளங்களின் தேவை குறித்த பார்வையை வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம். 

 

அயோத்திதாசர், எம்.சி. ராஜா, தந்தை என். சிவராஜ் போன்ற பிற ஆளுமைகளுடனான அவரது உறவு எப்படி இருந்தது?

 

அனைவரும் பூனா ஒப்பந்த வட்டமேஜை மாநாடுகளில், ஷெட்யூல் மக்களின் நலன்களை முன்வைத்து பங்கேற்ற மகத்தான ஆளுமைகள். அயோத்திதாசரும், தாத்தா இரட்டைமலையாரும் மாமன் மைத்துனர்கள். தாத்தா இரட்டைமலையாரின் சகோதரியைத்தான் பண்டிதர் மணந்துகொண்டார். அயோத்திதாசருக்கு பிறகு அவர் விட்டுச் சென்ற தென்னிந்திய நலவுரிமை சங்கத்தைத் தூக்கி நிறுத்தியவர் எம்.சி. ராஜா அவர்கள். தந்தை சிவராஜ் அவர்களோடும் இணைந்து அன்றைய சென்னை மாகான  மக்களுக்கு பல நலன்களை தாங்கள் வகித்த பொறுப்புகள் மூலம் ஆதிதிராவிட மக்களின் நலன்களைப் பேணிக்காத்தவர்கள் மேற்கண்ட ஆளுமைகள்.

 

ayd.jpg

 

சில சமயங்களில் அவர்கள் முரண்பட நேர்ந்திருக்கிறது. அந்த முரண்பாடு எத்தகையது? ஏனென்றால் அந்த முரண்பாட்டை மட்டுமே வைத்து இன்றளவும் இவர்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள்...

 

அயோத்திதாசருக்கும் தாத்தாவுக்கும் நேர்ந்த சிறு முரணை பலர் மிகைப்படுத்தி கட்டமைக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் குடும்ப உறவுகள். மேலும், அவர்களுக்கு வந்த சிறு முரண்கூட ஏதோ சொத்து தகராறோ, கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளோ அல்ல. தாத்தா தனது கொள்கைகளை 1893 முதல் 1900 வரை தான் நடத்திய பறையன் இதழில் வெளியிட்டார். பண்டிதர், தமிழன் இதழில் 1907 முதல் 1914 வரை வெளியிட்டார். இந்த காலக்கட்டங்களை நீங்கள் உற்று நோக்க வேண்டும். ஆரம்பத்தில் எந்த அடையாளத்தை வைத்து எம்மை ஒடுக்கினார்களோ அதே அடையாளத்தைக் கொண்டு பறையர் அடையாளத்தை பேசியவர் தாத்தா. அதன் பரிணாம வளர்ச்சியாக பண்டிதர், நாம் பூர்வ பௌத்தர்கள் என்ற அடையாளத்தை முன்வைத்தார். இது அப்போதைய காலக்கட்டத்தில் இருந்த எந்தப் பெயரில் நாம் ஓர்மைப் பெறுவது என்ற கருத்து முரண்தானே ஒழிய, பகைமுரணல்ல. அந்தக் கருத்து மாற்றத்தை அன்றைய பூலோகவியாசன் பத்திரிகை சற்று மிகைபடுத்தி எழுதியிருந்தது.

 

பிறகு அடுத்தடுத்து பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களோடு தாத்தா ஒத்துப்போனதால்தான் வட்டமேஜை மாநாடுகளில் அவரோடு இணைந்து பங்கேற்றார். பௌத்தம் குறித்து தாத்தா அவர்கள் பாபாசாகேப் அம்பேத்கருக்கு Depressed classes are not in the Hindu fold என்ற கடிதத்தில், ‘நாம் இந்துக்கள் அல்ல ஆதிபௌத்தர்கள் எனும்போது ஏன் தனியாக மதம் மாறி காட்டணும்’ என்று ஆதரவு நிலையில் அமைந்த தாத்தாவின் கடிதத்தைத் திரித்து, பட்டியல் மக்களிடம் சிண்டு முடிந்து, இம்மக்களைக்  கூறுபோடும் வேலையை இங்கிருக்கும் சங்பரிவாரங்களும், சாதி இந்துக்களும் திட்டமிட்டுக் கட்டமைக்கிறார்கள். இலண்டன் வட்டமேசை மாநாட்டிற்கு தாத்தாவை பாபாசாகேப் அம்பேத்கர் அழைத்தார். எம்.சி. ராஜாவை அழைக்கவில்லை என்ற வருத்தம் தாத்தாமீது எம்.சி. ராஜாவுக்கு இருந்ததாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

 

mcr.jpg

 

இரட்டை வாக்குரிமை கோரிக்கை குறித்து அண்ணல் அம்பேத்கர் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பேசியபோது, அத்தீர்மானத்திற்கெதிராக டாக்டர் மூஞ்ஜேவுடன் இணைந்து இரட்டை வாக்குரிமைக்கு எதிரான கருத்தை எம்.சி. ராஜா கொண்டிருந்தார் என்பதையும் இங்கிருப்பவர்கள் ஊதி பெருக்குகிறார்கள். 1942இல் பூனேவில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற எம்.சி. ராஜா, தான் இரட்டை வாக்குரிமைக்கு எதிராக கையெழுத்திட்டு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து சமாதானமடைந்து ஒன்றிணைகிறார்கள். மூஞ்சே அழைப்பின் பேரில் எம்.சி. ராஜா சென்றதையும், அண்ணல் அம்பேத்கர் அழைப்பின் பெயரில் தாத்தா இரட்டைமலை சீனிவாசனும் தந்தை என். சிவராஜும் சென்றதையும் வைத்தே பட்டியல் பிரிவு தலைவர்களிடையே சிண்டு முடியும் வேலையை இங்கிருப்பவர்கள் கட்டமைத்தார்கள். மற்றபடி இத்தலைவர்கள் ஷெட்யூல்டு மக்களுக்கான நலன்களைப் பேணுவதில் ஒரே நோக்கத்தோடே பயணித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

 

இரட்டைமலை சீனிவாசனின் மிக முக்கிய பணிகளாக எதைச் சொல்வீர்கள்?

 

இராவ்பகதூர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் வாழும் காலத்தில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானது. 1896லேயே காந்தியை சென்னையில் சந்தித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவிலும் சந்தித்திருக்கிறார். காந்திக்கு திருக்குறளை தமிழில் சொல்லித்தரும் அளவுக்கு நட்புறவு இருந்தும் அவர் காந்தியின் பின்னால் பயணிக்காமல், தன்னைவிட இளையவரான பாபாசாகேப் அம்பேத்கருடன் பயணித்தார். நகமும் சதையுமாக இருந்து இலண்டன் வட்டமேஜை மாநாடுகளில் அவருக்கு துணை நின்றது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த கொள்கை அணுகுமுறையாகும். 1925இல் ஆதிதிராவிட மக்கள் தோளில், இடுப்பில் துணி அணியக்கூடாது. பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது. பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பன போன்ற மனித உரிமை மீறல்களைத் தண்டனைக்குரிய குற்றமாக்க அன்றைய சென்னை மாகாண சட்டமேலவையில் தீர்மானம் கொண்டுவந்து வன்கொடுமை தடுப்புச் சட்டங்களாக அமல்படுத்தியது; ஆலய பிரவேச தீர்மானத்தை நிறைவேற்றியது என அவர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை.

 

இந்தியாவில்தான் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களிடம் வலியுறுத்தியபோது, அதற்கெதிராக அத்தேர்வு இங்கே நடத்தப்படுமானால் ஆதிக்க சாதி இந்துக்கள் மட்டுமே அரசின் பதவிகளை அடைவார்கள் என்று 1898இல் தாத்தா கொடுத்த மனுவின் அடிப்படையில், பட்டியல் மக்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கப்பெற்றன. அதில் உருவானதுதான் ஆதிதிராவிட மாணவர்களுக்கான தனி சமூகநலப் பள்ளிகளாகும். பஞ்சம நிலத்திற்காக தான் நடத்திய இதழ்கள் வழியே, தான் வகித்த பொறுப்புகளின் வழியே அவரது போராட்டம் தனி வடிவம் பெற்றது.

 

sm.jpg

சவிதா முனுசாமி

 

ஒரு இதழியலாளராக, அரசியல்வாதியாக, சமுதாய சிந்தனைவாதியாக, பட்டியல் மக்களின் தலைவராக, பஞ்சம நிலவுரிமைவாதியாக, மதிஒழிப்புவாதியாக அவரது சமூகப் பங்களிப்பு ஏராளம் ஏராளம். அதை சிறிய மணிமண்டபங்கள் கட்டுவதன் வாயிலாகவோ, தபால்தலை வெளியிடுவதன் வாயிலாகவோ அவரை நாம் அலங்கரிப்பதாகாது. தமிழக பாடப்புத்தகங்களில் தாத்தாவைக் குறித்த பாடங்கள், சாதியத்திற்கெதிராய் அவராற்றிய பணிகள் இடம்பெற செய்தல் வேண்டும். அதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

 

தலித் ஆளுமைகளின் சிந்தனைகளும் போராட்டங்களும் இருட்டடிக்கப்படுவதும் தவிர்க்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. இதற்கான மாற்றுத் திட்டம் என்ன?

 

முதலில் தலித் என்ற சொல்லாடலை விடுத்து ஷெட்யூல்டு, பட்டியல் மக்கள் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவோம். ஏனெனில் ஐ.நா. மன்றங்களில் அடையாளங்காட்டவும், ஃபண்டிங் ஏஜென்டுகள் இம்மக்களைக் காட்டி நிதி வாங்கித் தின்று இம்மக்களை மடைமாற்றவும் உருவாக்கிய வார்த்தைதான் தலித் என்ற சொல்லாடல். அதற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர், இசுலாமிய சிறுபான்மையினர் ஆகியோருடன் பட்டியல் மக்கள் வருவதால், பட்டியல் மக்களின் அதிகப்படியான சிக்கல்கள் தனித்த கவனம் பெறமுடிவதில்லை. தலித் என்றாலே கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பின்தங்கிய பலதரப்பட்ட பிரிவு மக்களை உள்ளடக்கியதாக இருப்பதால் பட்டியல் மக்களின் பிரச்சனைகள் அதில் தனித்த கவனம் பெறுவதோ அல்லது தீர்வைப் பெறுவதோ நடைபெறுவதில்லை. முன்பு தலித் என்ற சொல்லை அழைக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் இறக்கிவிட்டு புழக்கத்தில் விட்ட அரசுகள், இப்போது அழைக்க வேண்டாம் என்று சொல்வதால் அது நமக்கு வலு சேர்ப்பதாகவும் ஒற்றை கருத்தாகவும் ஆகாது. இவர்களின் நோக்கமென்பது வேறு. நமது பார்வை என்பது வேறு. இது இரண்டையும் குழப்பி இங்கே அரசியல் செய்யப்படுகிறது. குறிப்பாக எனக்குப் பெயர் வைக்க இவர்கள் யார்? எமக்கான பெயரை எமது ஆசான்கள் வைத்துள்ளார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் தலித் என்கிற பதத்தை எங்கும் கையாளவில்லை. தீண்டப்படாத மக்கள், ஷெட்யூல்டு அதாவது அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியல் மக்கள் என்கிறார். இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தலித் ஆளுமைகளுக்கான சிந்தனைகள் இருட்டடிக்கப்பட காரணம், இங்கே இன்றுவரை நிலவும் சாதியாதிக்க மனநிலைதான். மேலும் நமது வரலாறுகள் எதுவும் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் போயிருக்கிறது. திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நாங்கள் எமது ஆளுமைகளான தாத்தா இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, தந்தை சிவராஜ் ஆகியோரது சட்டமேலவை உரைகள், தீர்மானங்கள், அவைக்குறிப்புகள் போன்றவற்றைப் பெறுவதில் கூட இங்கே சிக்கல் நிலவுகிறது. இதில் விதிவிலக்கானவர் அண்ணல் அம்பேத்கர் ஒருவரே. ஏனெனில் அவர் தான் வாழும் காலத்திலேயே தனது பேச்சுகளையும் எழுத்துக்களையும் ஆவணமாக்கி தந்துவிட்டே சென்றிருக்கிறார். அதேபோல பல தலைவர்களின் போராட்டங்கள், வாழ்வியல் வலிகள், அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் பல சோதனைகளைக் கடந்து நாம் ஆவணமாக்க முனைய வேண்டும்.

 

பல வட்டாரத் தலைவர்களின் போராட்ட வடிவங்கள், சிந்தனைகள்கூட தொடர்ந்து சிறுமை புத்திகொண்ட சொந்த சமூக புல்லுருவிகளாலும் கூட திட்டமிட்டே புதைக்கப்படும் செயல்கள் மனவருத்தத்தை தருகிறது. இதில் சங்பரிஙாரங்கள் கூட தாத்தாவின் அடையாளங்களைச் சிதைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. உதாரணத்திற்கு தாத்தாவின் உடை அரசியல். அவரது கோட்டு, சூட்டு, பூட்ஸ், மீசை கூட சாதிய ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாகவும் கற்றறிந்த மேதை என்பதையும் பறைசாற்றுவதாக இருக்கும். ஆனால் உலகம் முழுவதும் சுற்றிவந்த ஆளுமையை ஒரு வட்டாரத் தலைவராகவும், ‘நாட்டாமை’ பட வில்லன் ரேஞ்சுக்கு லுங்கி மைனர் செயின் போட்ட உருவங்களாகவும் பேசி இந்துத்துவத்திற்கு விலைபோன சில அமைப்புகள் அவரைக் கட்டமைப்பது வரலாற்றுப் பிழை.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.