பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் அலிம் அல் புகாரி விரிவாகப் பேசுகிறார்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பதற்கு காரணம் இந்தியா கூட்டணியின் மீது அவர்களுக்கு உள்ள பயம் தான். இதுவே இந்தியா கூட்டணிக்கான வெற்றி. மக்களுக்கு நல்லது செய்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே மோடிக்கு இருக்காது. அதானிக்கு நல்லது செய்வது தான் அவருடைய நோக்கம். இந்தியா கூட்டணியின் பெயரை தீவிரவாதிகளோடு ஒப்பிடும் அளவுக்கு மோடிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவும் பயத்தில் எடுக்கப்பட்டது தான்.
சுதந்திரம் கிடைத்த பிறகும் சில ஆண்டுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாகவே நடைபெற்றன. அதன் பிறகு நடைபெற்ற மாற்றங்களால் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்போது இதை மீண்டும் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? தேர்தலுக்கு முன்பு இது ஏன் இவர்களுக்குத் தோன்றுகிறது? இதையே காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய ஆட்சியை நீங்கள் ஏன் கலைத்திருக்கக் கூடாது? ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பேச்சு அதிமுக ஆட்சியில் எழுந்தபோது அதை அவர்கள் எதிர்த்தனர். இப்போது விஷமத்தனமாக ஆதரிக்கின்றனர்.
தாங்கள் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று அதிமுக முடிவு செய்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும்போது ஆளுமைகளுக்குத் தான் கோபம் வரும். அடிமைகளுக்கு கோபம் வராது. நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக ஆட்சி தான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டுவந்தால் மாநிலக் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் வரும். அதனால் அவர்களுக்குள் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்வார்கள்.
சர்வாதிகாரம் என்பது உச்சத்தை அடைந்து, அதன் பிறகு தான் வீழும். பாஜக இந்த நாட்டுக்கு செய்த அட்டூழியங்களை ஒருநாள் முழுவதும் பேசலாம். நீதிபதி லோயாவைக் கொலை செய்தது யார்? 2500 இஸ்லாமியர்களைக் கலவரம் மூலம் கொன்றது யார்? மக்களுக்கு இது எதுவும் தெரியாதா? கர்மாவை நம்பும் பாஜகவுக்கு இதெல்லாம் தங்கள் மீதே திரும்பும் என்று தெரியாதா? ஜெயலலிதாவைக் கொன்றது யார்? அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஏன் பிரதமர் நேரடியாக வரவில்லை? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவே மணிப்பூராக மாறும் என்று பாஜகவால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மக்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசும்போது மோடி நக்கல் செய்தார். இது ஆணவத்தின் உச்சம். இது இன்னும் உச்சத்தை அடைய வேண்டும். அப்போதுதான் அவர்கள் வீழ்வார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அவர்கள் அறிவிக்கும்போது, அவர்களுடைய முடிவின் ஆரம்பத்தை அவர்கள் அடைவார்கள்.
கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...