Skip to main content

அ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது!அரசியல் நட்பு தேவையில்லை!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

எடப்பாடி அரசு விவகாரங்களையும், அ.தி. மு.க. உள்கட்சி விவகாரங்களையும் சில மாதங்கள் நிர்மலாவும் கவனித்து வந்திருந்ததால் அவரிடம் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை விவாதித்துள்ளார் எடப்பாடி. "இதனை அமித்ஷா அல்லது பியூஷ்கோயலிடம்தான் விவாதிக்க வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கை பிரதமரிடம் குறைந்திருக்கிறது அதனை சரி செய்யப் பாருங்கள். அமித்ஷா மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்' என அறிவுறுத்தியிருக்கிறார்.

 

admk



இதனையடுத்து, மறுநாள் (16-ந்தேதி) அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பு குறித்து விசாரித்த போது, "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஓ.பி.எஸ்.சை மீண்டும் மரியாதைக்குரியவராகப் பார்க்கிறார் அமித்ஷா. அதே நேரத்தில், கொங்கு வேளாளர்கள் சமூகம்கூட எடப்பாடிக்கு ஆதரவாக இல்லை என்ற என்கிற முடிவுக்கு வந்துள்ளார். அதனால்தான், ஓ.பி.எஸ். மீது பரிவு காட்ட நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.

 

bjp



தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்று தனது கணக்கை துவக்கத் திட்டமிடுகிறது. அதற்கு ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக்கி அவரது தலைமையில் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கலாம் என ஆலோசித்துள்ளனர்.

 

admk



ஆனால், "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுதான் நமக்கு கிடைக்கும். அந்தளவுக்கு மக்கள் விரோதத்தை சம்பாதித்துள்ளது எடப்பாடி அரசு. தனித்துப் போட்டியிட்டாலே ஓரளவு இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்கும்' என தமிழக பா.ஜ.க. தலைவர்களிடமிருந்து தரப்பட்ட ஆலோசனையால் கூட்டணியை முறித்துக்கொள்ளும் மூடில் இருக்கிறது பா.ஜ.க. தலைமை.

இதனையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி. அந்த சந்திப்பில், ஏற்கனவே அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணியிடம் எப்படி கடிந்துகொண்டாரோ அதே கோபத்தை எடப்பாடியிடமும் காட்டினார் அமித்ஷா. எடப்பாடியோ 2021 வரை தனது ஆட்சிக்கு ஆபத்தை மோடி தரமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தவர். அந்த நம்பிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், மோடியும் அமித்ஷாவும் மனசு வைத்தால் மட்டுமே, சட்டச்சிக்கலும் கட்சியில் ஓ.பி.எஸ். எதிர்ப்பு இல்லாமலும் ஒற்றைத்தலைமையை கைப்பற்ற முடியும்ங்கிறது அவரது எண்ணம்.

 

admk



இது குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி, "இந்த ஆட்சி உங்களுக்கானது. அதிகாரிகள் தொடங்கி திட்டங்களை துவக்கி வைப்பது வரை எல்லாவற்றையும் நீங்களே முடிவெடுங்கள். அந்த முடிவை செயல்படுத்துபவராக மட்டுமே நான் இருக்கிறேன். புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டி.ஜி.பி. பதவிகளில் யாரை நியமிக்கலாம்ங்கிறது உங்கள் சாய்ஸ்தான். ஓ.பி.எஸ்.சை விட அதிக விசுவாசத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன். அதனால் ஒற்றைத் தலைமையை எனக்கு கிடைக்க உதவுங்கள். நீங்கள் சொன்னால் மட்டுமே ஓ.பி.எஸ். அமைதியாவார்.


ஒற்றைத்தலைமைக்குள் நான் இருக்கும்பட்சத்தில், உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்றுத்தர முடியும். கடந்த தேர்தல் போல தவறு நடக்காது. என்னை நம்புங்கள்' என கோரிக்கை வைத்திருக்கிறார் எடப்பாடி. அதற்கு அமித்ஷா, "அ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது. மீண்டும் புதுப்பிக்க வேண்டுமானால் பிரதமரிடம் பேச வேண்டும். மத்திய அரசு-மாநில அரசு என்பதைத்தாண்டி அரசியல் நட்பு தேவையில்லை என நினைக்கிறோம். ஆனாலும், ஒற்றைத் தலைமை குறித்து தங்கமணி மூலம் ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டதுதான். கட்சி-ஆட்சி இரண்டிலும் நீங்களே இருக்க முடியாது. ஆட்சியில் நீங்கள் இருந்துகொள்ளுங்கள். கட்சி தலைமைக்கு ஓ.பி.எஸ்.சை கொண்டு வாருங்கள்' என தெரிவித்திருக்கிறார் அமித்ஷா. இதனால் இந்த சந்திப்பிலும் எடப்பாடிக்கு மூடு அவுட் தான்''’ என்கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்கள். மத்திய-மாநில உளவுத் துறை வட்டாரங்களிலும் இதனையொட்டியே தகவல்கள் எதிரொலிக்கின்றன.

டெல்லி பயணத்தின்போது, தமிழக டிஜி.பி. நியமனம் தொடர்பாக ஜாபர் சேட்டுக்குப் பரிந்துரைத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி. சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றதற்கான வியூகங்களையும் கள வேலைகளையும் கச்சிதமாக செய்தவர் ஜாபர் சேட் என்பதை டெல்லியிடம் எடப்பாடி வலியுறுத்திய போதும், அங்கிருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லையாம். இதிலும் எடப்பாடிக்கு ஏமாற்றம் தான் என்கிறார்கள் டெல்லி பிரமுகர்கள்.