‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுகம் நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள்(தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரரம் நடவடிக்கை எடு...’, என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பட்டு வருவது, போர்ட்டிரஸ்ட் எனப்படும் தூத்துக்குடி துறைமுக சபையில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
துறைமுக சபைக்கு கட்டவேண்டிய ராயல்டி நிலுவைத் தொகையான 2,200 கோடி மற்றும் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஒய்வூதியத் தொகை, பணப்பலன்கள், ஊதிய உயர்வுத் தொகை என்று ஒட்டுமொத்தத் தொகையையும் அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் விபூதியடிக்க நினைப்பது தான் மொத்த துறைமுகத் தொழிலாளர்களின் ஆக்ரோஷத்திற்கு காரணம், என்கிறவர்களே அந்நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய மொத்தத் தொகையையும் வசூல் செய்யமுடியாமல் கைபிசைகிறது தூத்துக்குடி துறைமுக சபை என்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அந்தக் கார்ப்பரேட் கம்பெனி நடந்து கொண்டவைகளை உழைத்து ஒன்றுமில்லாமல் நிற்கிற தொழிலாளர்கள், துறைமுக சபை நிர்வாகத்தினரின் அதிகாரிகள் என்று பலரிடம் விசாரித்த போது, தங்களின் அடையாளம் வேண்டாம், துறை சார்ந்த பணி என்பதால் அப்படி? என்றவர்கள் நடந்தவைகளை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கடமை விஸ்வாசம் எங்களுக்கு என்றபடியே அனைத்தையும் நம்மிடம் கொட்டினார்கள்.
தூத்துக்குடியின் முகவரியும், அடையாளமுமான வ.உ.சி. துறைமுகம் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் தற்போதைய பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பில் வருகிறது.
1996ன் போது ஆரம்பிக்கப்பட்ட வ.உ.சி. துறைமுக சபையான போர்ட்டிரஸ்ட்டின் கப்பல் போக்குவரத்தின் பெர்த்களில் சரக்கு பெட்டகங்கள் என்கிற கன்டெய்னர்களை கப்பலில் லோடிங், அன்லோடிங் என்று கையாள்கிற யூனிட்டில் நடந்த பெட்டகங்ளுக்கான நிர்ணயிக்கப்பட்ட ராயல்டி தொகையை துறைமுகத்திற்குச் செலுத்தாமல் நிலுவையாக வைத்தது தான் விவகாரமே,
1996ன் போது தூத்துக்குடியின் வட கடல் பகுதியில் நாடு விடுதலைக்கு முன்பாக வெள்ளை ஏகாதிபத்திய காலத்தில் சுதேசியாகக் கப்பலோட்டிய வ.உ.சிதம்பானர் பெயரில் அமைக்கப்பட்டதுதான் வ.உ.சி. கப்பல் போக்குவரத்துக் கழகம் எனப்படுகிற வ.உ.சி. போர்ட் டிரஸ்ட். 1996 ஆரம்ப காலங்களில் 7 பெர்த்களுடன் (கப்பல்கள் வருவது மற்றும் புறப்பாடு தளங்கள்) அமைக்கப்பட்டு துவக்கத்தில் கடல் மார்க்கமாக சரக்கு கப்பல்கள் பயணப்பட்டு வந்தன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தென் தமிழகம் தூத்துக்குடியில் துறைமுகம் அமைக்கப்பட்டதற்கு காரணம் தூத்துக்குடி கடல் பகுதி சமதளமாகவும் காலப்பருவச்சூழல்களுக்கு ஏற்ப கப்பல்கள் வந்து செல்வது, துறைமுக அமைப்பிற்கேற்ப கடல் நீர் ஒத்துழைக்குபடியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது தான் என்கிறார்கள்.
1996ன் போது 7 பெர்த்கள் அமைக்கப்பட்டதன் மூலம் வருடத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு மட்டும் 1100 சரக்கு கப்பல்கள் வந்து போன நிலையில், கப்பல்களின் எண்ணிக்கை காலப்போக்கில் கூடுதலாகி 1340 கப்பல்களாக உயர்ந்து, தற்போது 2024ல் 1600 சரக்கு கப்பல்கள் வந்து செல்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. கப்பல்களின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக துவக்கத்தில் 7 பெர்த்துகள் அமைக்கப்பட்டதின் விரிவாக்கமாக நான்கு டெர்மினல்களைக் கொண்ட 16 பெத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, மத்திய அரசுக்கான தொழில்முறை வருமான அடிப்படையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை முக்கிய காரணியாகவும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஆரம்ப காலங்களில் 4 லட்சம் கன்டெய்னர்கள் எனப்படுகிற சரக்குபெட்டகம் கையாளப்பட்டு சரக்குக் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பட்ட நிலையில் , வளர்ச்சிகாரணமாக மாதம் ஐந்தரைலட்சம் சரக்குப் பெட்டகங்கள் வரை கையாளப்பட்டு வந்திருக்கின்றன. இப்படியான சரக்குப் பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், சிலோன், மலேசியா, துபாய் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பட்டு வந்துள்ளன.
வர்த்தகம் எனப்படுகிற இது போன்ற சரக்கு பெட்டகம் கையாளுதல், பிறவர்த்தக அலகுகள் துறைமுக சபையால் நேரடியாக நடத்த இயலாத சூழல் என்பதால் அது போன்ற வர்த்தக அலகுகள் தனியாருக்கு வாடகை, ராயல்ட்டி அடிப்படையில் துறைமுக சபை பக்கா அக்ரீமெண்ட்டுடன் விட்டுள்ளது என்கிறார்கள் துறைமுக சபை சார்ந்த அதிகாரிகள்.
அந்தக் கணக்கில் தான் பெர்த்களில் கையாளப்படுகிற வர்த்தகமான சரக்குப் பெட்டகங்கள் சரக்கு கப்பல்களில் லோடிங் மற்றும் அன்லோடிங் செய்வது (ஏற்றுவது இறக்குவது) போர்ட் டிரஸ்ட்டின் துவக்க காலமான 1996 முதல் பன்னாட்டு சரக்கு பெட்டக கையாளும் மையம் வர்த்தகம் முறை, சிங்கப்பூரை சென்டராகக் கொண்ட P.S.A. SICAL எனப்படும் போர்ட் ஆஃப் சிங்கப்பூர் அதாரிட்டி, சிகால் என்கிற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கென்று சரக்குப் பெட்டகம் கையாள்கிற வகையில் பெர்த்க்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெர்மினலில் ஒரு சரக்கு பெட்டகம் (கன்டெய்னர்) கையாள்வதற்கு சரக்கு அனுப்புகிற பார்டியிடமிருந்து இவ்வளவு தொகை தான் வசூல் செய்ய வேண்டும், அப்படி கையாள்கிற சரக்கு பெட்டகங்களுக்கு இவ்வளவு தொகை என ராயல்ட்டியாக மாதத் தோறும் அனுப்பப்படுகிற மொத்த சரக்குப் பெட்டகங்களுக்கான ராயல்ட்டி தொகையை நிறுவனம் துறைமுக சபைக்குச் செலுத்தியாக வேண்டும், என்றும் லீகல் பிரிவுகளுடன் கூடிய அக்ரீமெண்ட் நிறுவனம், மற்றும் போர்ட்டிரஸ்ட் இணைந்து போடப்பட்டுள்ளன. மேலும் காலநிலைக்கு ஏற்ப வர்த்தக ரீதியாக இந்தந்த வருடங்களில் ராயல்ட்டி தொகை உயர்த்தப்படும் என்று அக்ரீமெண்ட்டில் சொல்லப்பட்டுள்ள ஷரத்களில் ஒன்று என்கிறார்கள் போர்ட்டி டிரஸ்ட்டின் உறுப்பினர்கள்.
பி.எஸ்.ஏ. சிகால் இந்த சரக்கு பெட்ட கையாளல் வர்த்தகத்தில் சுமார் இருநூறு தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலி சம்பளம் முறையான பி.எப்., இ.எஸ்.ஐ. போன்றவைகள் தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் அடப்படையில் அமர்த்தியிருக்கிறது.
வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சரக்கு அனுப்புகிற பார்ட்டிகள் தங்களின் சரக்குகளை கன்டெய்னர்களில் ஏற்றி லோக்கல் ஏரியாவில் கன்டெய்னர்களைக் கையாளும் தனியார் ஷிப்பிங் கார்பரேஷன்களில் ஒப்படைத்து விட வேண்டும். அப்படி கன்டெய்னர்களில் சரக்கு வைப்பது பி.எஸ்.ஏ. சிகால் மூலம் கஸ்டம்ஸ் துறையினரின் நேரடிப் பார்வையில் தான் செயல்படவேண்டும். லோடிங் முடிந்த உடன் மேற்படி சரக்கு பெட்டகங்கள் கஸ்டம்ஸ் துறையினரால் சீல் வைக்கப்பட்டு லாக் செய்யப்பட்டு விடும். இந்த நடைமுறையில் தான் சரக்கு பெட்டகங்களை அந்தந்த ஷிப்பிங் கார்ப்பரேஷன் கம்பெனிகள் கப்பல்களில் லோடு செய்வதற்கு வசதியாக கன்டெய்னர்களை பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்திற்குரிய பெர்த்களின் டெர்மினல் பாயிண்ட்களில் வைத்து விடுமாம்.
பெர்தகளுக்குப் போன சரக்கு பெட்டகங்கள் பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனப் பொறுப்பில் அவர்களின் தொழிலாளர்கள் பெரிய சைஸ் கிரேன்களின் மூலம் குறிப்பிட்ட கப்பல்களில் லோடு செய்து விடுவார்கள். அதே போன்று கப்பல்களிலிருந்து வருகிற இறக்குமதி செய்யப்படவேண்டிய சரக்கு பெட்டகங்களை பி.எஸ்.ஏ.சிகால் கம்பெனியே இறக்கி சுங்கத்துறையின் சோதனைக்காக பெர்த்களில் அடுக்கிவிடும் சோதனை முடிந்த பிறகு பெட்டகங்கள் குறிப்பிட்ட ஷிப்பிங் கார்பரேஷன் பொறுப்பிற்குப் போன பின்பு பார்ட்டிகளுக்கு டெலிவரியாகி விடும்.
இப்படியான சரக்குப் பெட்டக கையாளுதல் வகையில் ஏற்றவும் இறக்கவும் செய்வதற்கான கட்டணங்களாக ஒரு சரக்கு பெட்டகத்திற்கு இவ்வளவு தொகை என்று வசூல் செய்வதில் பி.எஸ்.ஏ.சிகால் துறைமுகத்திற்கு செலுத்த வேண்டிய ராயல்ட்டியை செலுத்திவிடும். ஆரம்பத்தில் முறையாக ராயல்ட்டியை செலுத்தி வந்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.ஏ.சிகாலின் வருமானமும் கோடிகள் அளவு உயர்ந்திருக்கிறது.
1996களிலிருந்து துறைமுகம் வந்து செல்கிற கப்பல்களிலிருந்து மாதம், 4 முதல் 5 லட்சம் கன்டெய்னர்களை லோடிங், அன்லோடிங் என்ற லெவலில் கையாண்டிருக்கிறது பி.எஸ்.ஏ.சிகால். தொடர்ந்து கையாளப்படுகிற சரக்கு பெட்டகங்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டு தான் வந்திருக்கிறன. இந்த கார்ப்பரேட் இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்த்திருக்கிறதாம்.
துறைமுக சபையின் ஆரம்ப காலங்களில் பி.எஸ்.ஏ.சிகால் கையாளப்படுகிற மொத்த சரக்கு பெட்டகங்களுக்கான ராயல்டியை முறையாக போர்ட் டிரஸ்ட்டிற்கு செலுத்தி வந்திருக்கிறது. காலப் போக்கில் சரக்கு கப்பல்களின் வரத்து அதிகமாகவே துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டு 7 பெர்த்திலிருந்தது 16 பெர்த்களாக உயர்த்திருக்கிறது. இதில் மொத்த பெர்த்களையும் பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்தால் கையாள இயலாது என்பதால் துறைமுக நிர்வாகம் அவைகளில் கன்டெய்னர்களை கையாள்வதற்காக, டி.சி.டி.பி. மற்றும் ஜே.எம். என்கிற இரண்டு நிறுவனங்களுக்கு அக்ரிமெண்ட் முறைப்படி விட்டிருக்கிறது. அந்நிறுவனங்கள் தற்போது வரை கன்டெய்னர் கையாளலுக்குரிய ராயல்டியை முறையாகச் செலுத்தி வருகிறதாம். ஆனால் கார்ப்பரேட் நிறுவனமோ துவக்கத்திலிருந்தே போர்ட் டிரஸ்ட்டிற்கான ராயல்ட்டி தொகையை முழுமையாகச் செலுத்தாமல் பகுதியாகச் செலுத்தியதின் விளைவு, செலுத்த வேண்டிய தொகையின் கோடிகள் வருடக்கணக்கில் நிலுவைப் பாக்கியாக பல கோடிகள் வரை உயர்ந்திருக்கின்றனவாம். குறிப்பிட்ட வருடத்திற்குப் பிறகு அக்ரீமெண்ட்படி ரயால்ட்டி தொகையும் உயர்த்தப்பட்ட போது, வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பி.எஸ்.ஏ.சிகால் அக்ரீமெண்ட்படி தங்களால் ராயல்ட்டி தொகைகளைக் கட்ட இயாது என்று தெரிவித்திருக்கிறது. ஆனாலும் கார்ப்பரேட் கன்டெய்னர் கையாளலை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திவந்திருக்கிறது. ஆனால் போர்ட்டிரஸ்ட்டிற்கு செலுத்த வேண்டிய ராயல்ட்டியை செலுத்தாததால் போர்ட்டி டிரஸ்ட்டிற்கு செலுத்த வேண்டிய ராயல்ட்டி பாக்கி 2200 கோடியாக உயர்த்திருக்கிறது.
இதனிடையே ராயல்ட்டி விஷயம் விவகாரமாக பி.எஸ்.ஏ.சிகால் கோர்ட்டிற்குச் சென்றுவிட்டது. அங்கும் தங்களால் ராயல்ட்டி செலுத்த இயலாது என்று தெரிவிக்க இருதரப்புகளும் உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்த, ஒரு சில வருடங்களுக்குப் பிறகு பொறுப்பை போர்ட் டிரஸ்ட்டிடம் ஒப்படைத்து, உங்களுக்கான நிலுவைத் தொகையை வசூல் செய்து விட்டு அவர்களை விடுவியுங்கள் என்று ஹைகோர்ட் தெரிவித்து விட்டதாகச் சொல்கிறார்கள் போர்ட்டிரஸ்ட்டிகள். மேலும் 2200 கோடி கடன் நிலுவையை போர்ட்டி டிரஸ்டிற்கு செலுத்தாத பி.எஸ்.ஏ.சிகால் கடந்த மாதத்திலிருந்து தனக்கான பெர்த்களின் பெட்டகக் கையாளல் தொழிலை நிறுத்திக் கொண்துடன், மேற்படி பெர்த்களை போர்ட் டிரஸ்ட்டிடம் சரண்டர் செய்து விட்டு கூடாரத்தைக் காலி செய்வதில் தீவிரமாகி விட்டதாம். மேலும் இந்நிறுவனத்தில் வேலை செய்த 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையின்றியும், முறையான சம்பளம், பணக்கொடைகள் கிடைக்காமலும் குடும்பங்களோடு திண்டாடி வருகிறார்கள்.
பி.எஸ்.ஏ.சிகால் போர்ட்டிரஸ்ட்டிற்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் ஒதுங்கப்பார்க்கிறது. தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுக்கிறது, கேள்வி கேட்பாரில்லை என்ற ஆதங்கத்தில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை விரிவான கண்டனப் போர்டுகளில் வெளிப்படுத்தி, துறைமுகமும், தாங்களும் பன்னாட்டு நிறுவனத்தால் ஏமாற்றப்படுவதையும் மத்திய அரசு தலையிடக் கோரியும் தொழிலாளர்கள் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரத்தை வீரியமாக்கியதுடன் ஒரு சரக்கு பெட்டகத்திற்கு துறைமுக சபை நிர்ணயித்த தொகையை தாண்டி நிறுவனம் அதிகப் படியாக வசூலித்த தொகை எல்லாம் எங்கே, கோடிக் கணக்கான பாக்கி ராயல்ட்டி தொகை எங்கே போனது என்றெல்லாம் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியது துறைமுக சபையில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வ.உ.சி.போர்ட் அதாரிட்டியின் டிரஸ்டி அமைப்பின் தலைவரான பாலகிருஷ்ணன், பி.எஸ்.ஏ. சிகால் நிறுவனம் தரவேண்டிய ராயல்ட்டி தொகையான 2200 கோடியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று அதில் பணியாற்றிய தொழிலாளர்களின் உரிமைத் தொகை, ஊதிய நிலுவைகள் பணப்பலன்களின் தொகையும் தரப்பட வேண்டும். மேலும் பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனம் சென்னை விசாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் இதே போன்று சரக்கு பெட்டகம் கையாள்வதை மேற்கொண்டிருக்கிறது. எனவே அந்நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தலையிட வேண்டும். துறைமுக சபையின் நிதி இழப்பீடு சரி செய்யப்பட வேண்டும் என்று சபைக்கும், சபையின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரிக்கும் 15.11.2024ல் விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார் அழுத்தமான குரலில்.
பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்தின் தொழிலாளர்களில் ஒருவரும் சி.ஐ.டி. யூனியனின் நிர்வாகியுமான பாஸ்கர், சரக்கு பெட்டகம் கையாள்வதில் சிகாலுக்கு நல்ல பிக்அப் ஆகி, வருமானம் கிடைத்தது. ஒரு கப்பலில் 1200 முதல் 1800 சரக்குப் பெட்டகங்கள் வரை வரும். அதை நாங்கள் இரண்டரை நாட்களில் இறக்கி டெர்மினலில் வைத்து விடுவோம். தொழிலாளர் நலச்சட்டப்படி, பி.எப். உள்ளிட்ட அனைத்து வகையின் அடிப்படையில் நாங்கள் வேலைபார்த்தாலும் சம்பளம் மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படைதான். என்போன்ற பல தொழிலாளர்கள் 22 வருடமாக வேலைபார்ப்பவர்கள். ஆறு வருடமாக ஊதிய உயர்வு தரப்படல வர வர நாங்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டோம். கேட்பதற்கு நாதியில்ல. வேலையின் போது அரைமணி நேரம் அனுமதியின் பேரில் வெளியே சென்றாலும் 2 நாள் சம்பளத்தைப் பிடித்து விடுவார்கள். இப்ப கம்பெனி, தன், செயல்பாட்ட நிப்பாட்டிருச்சி, எங்க பி.எப்., பணப்பலன் கிராஜூட்டி தொகைகள் ஊதிய பாக்கிகள் கிடைக்குமான்ற சந்தேகம். இத நம்பி பல தொழிலாளர்க வீடுகளில் சரியா அடுப்பெரியல. கடன்காரன்களா தெருவுல நிக்கோம். கோர்ட் வரைக்கும் போயிட்டோம். பொழப்புக்கு வழியில்ல என்றார் வலியும் வேதனையுமாய்.
நாம் இதுகுறித்து பி.எஸ்.ஏ. சிகால் நிறுவனத்தின் அட்மின் சிவன்ராஜைத் தொடர்புகொண்டு கேட்டதில். ஆரம்பத்தில் தமிழில் பேசியவர் பின்னர் ஆங்கிலத்திற்கு மாறினார். ‘கேஸ், சுப்ரீம் கோர்ட் லீகல் ப்ரொசீடிங்கிலிருக்கிறது. கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. அதைப் பற்றிப் பேசக் கூடாது. வி சுட் நாட் டாக்’ என்று முடித்துக் கொண்டார்.
நிலுவைத் தொகை 2200 கோடிகள். இறுதிக்கட்ட நிலவரப்படி துறைமுக நிர்வாகத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் இதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது என்கிறார்கள் துறைமுக வட்டாரத்தினர்.