Skip to main content

இதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்! டுலெட் - விமர்சனம் 

Published on 22/02/2019 | Edited on 23/02/2019

வீடு... மனிதனின் அடிப்படை அத்தியாவசிய தேவையாகவும் ஆகப்பெரும் லட்சியமாகவும் இருப்பது. பிழைப்புக்காக நகரத்துக்கு இடம்பெயர்பவர்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிலை இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து அதில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கிய அந்த காலகட்டத்தில் வேறு வேலைகளில் இருந்தவர்களுக்கு வீட்டு வாடகை என்பது மிகப்பெரும் சுமையானது. இதைத் தாங்க முடியாமல் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு சென்றவர்கள் அதிகம். அந்த 2007 காலகட்டத்தில் வாடகை உயர்வால் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைக்கு வரும் இளங்கோ - அமுதா தம்பதி தங்கள் குழந்தை சித்தார்த்துடன் வீடு தேடும் படலமும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் விதவிதமான கேள்விகள், சவால்கள், அவமதிப்புகள், அனுபவங்களும்தான் இயக்குனர் செழியனின் 'டுலெட்'.

 

tolet movie family



உலகமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 80 விழாக்களில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 34 விருதுகளைப் பெற்றுள்ள படம்... தேசிய விருதையும் வென்று பின்னர் திரைக்கு வந்திருக்கிறது. பின்னணி இசை கிடையாது, பாடல்கள் கிடையாது, விறுவிறுப்பு, பொழுதுபோக்குக்கான எந்த அம்சங்களும் கிடையாது, அழகழகான கோணங்கள், ஃப்ரேம்கள், லொகேஷன்கள் கிடையாது. ஒரு ஒளிப்பதிவாளர், தான் இயக்கும் முதல் படத்துக்கு எந்த ஒரு மேக்-அப்பும் சேர்க்காமல், சொல்ல வந்த கதைக்கு முழுமையாக உண்மையாக இருக்கும்படி இயக்கியதற்காகவே அவரை ஆரத்தழுவி வரவேற்கலாம். அப்படியென்றால் படத்தில் எதுவும் இல்லையா, வறட்சியாக இருக்குமா? இல்லை. படமெங்கும் நாம் புன்னகைக்க, நெகிழ, அதிர்ச்சியடைய பல தருணங்கள் இருக்கின்றன. கதை நடக்கும் இடத்தின் சத்தங்களே இசையாகி காட்சிகளுடன் சேர்ந்து கதை சொல்கின்றன. படம் முடிந்து நெடு நேரத்திற்கு பெரிய தாக்கத்தையும் சிந்தனையையும் நமக்குள் உண்டாக்குகிறது டுலெட். ஈரானிய சினிமாக்களையே எத்தனை நாட்களுக்கு உதாரணம் சொல்வது, நாம் அந்த அளவுக்கு ஒரு படமெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் செழியன்.

IT துறையின் வளர்ச்சி பிற சாதாரண எளிய பணிகளில் இருந்த மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்துத் தொடங்கும் படம், IT ஊழியர்களின் மீதான காழ்ப்பாகவோ குற்றச்சாட்டுகளாகவோ செல்லாமல் இருப்பது மிகப்பெரும் ஆறுதல். வீடு தேடும் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ஒவ்வொரு வகை. ஜன்னலே இல்லாத ஒரு வீடு, கறுப்பு சட்டையெல்லாம் போடாதீங்க என கண்டிக்கும் ஒரு வீட்டுக்காரர், ஒரு வீட்டை காலி செய்யும் முன்பே அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டுப் பார்க்க வருபவர்கள் முன்பு கூனிக்குறுகி நிற்கும் தருணம், வீட்டை வாடகைக்குக் கொடுக்க முடிவு செய்யும் முன் உரிமையாளர் செய்யும் பின்புல விசாரணை என 'டுலெட்' நம்மில் பலர் கடந்த வந்துள்ள உண்மை அனுபவங்களின் தொகுப்பு. வறட்சியான உண்மைகள் மட்டுமில்லை, கவிதையான பல காட்சிகளும் உண்டு. அப்பா சட்டையை அயர்ன் செய்யும்போது சுவற்றிலிருந்து பிய்த்து கசக்கி எறியப்பட்ட தன் ஓவிய காகிதத்தையும் அயர்ன் பண்ண சிறுவன் சித்தார்த் கொடுப்பது, வீடு தேடும்போது ஒரு வீட்டில் வயதான ஒரு தம்பதியும் மூன்று பூனைகளும் வாழ்வதைப் பார்த்து 'நம்மால் அவர்கள் வேறு இடம் தேடும் நிலை ஏற்படக்கூடாது' என அந்த வீட்டை வேண்டாம் என்று சொல்வது... இப்படி கவித்துவமான தருணங்கள் பல உண்டு.

 

tolet santhosh sreeram



சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், சிறுவன் தருண்... மூவரும் ஒரு எளிய குடும்பத்தை மிக இயல்பாகப் பிரதிபலிக்கிறார்கள். இளங்கோ என்ற உதவி இயக்குனராக, சினிமாவில் வெற்றி பெற முயலும் இளைஞராக, அதுவரை சினிமாவுக்குள்ளேயே கிடைத்த வேலையெல்லாம் செய்து செலவுக்கு பணம் ஈட்டும் குடும்பஸ்தனாக துளி விலகலுமில்லாமல் நம் முன் வாழ்கிறார் சந்தோஷ். இயலாமை, வறுமையிலும் அவ்வப்போது நடக்கும் சிறிய நகைச்சுவை என அந்தப் பாத்திரத்தின் அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். சந்தோஷ், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ஷீலா, கணவனின் இயலாமை மீது கோபம், அதே நேரம் அவனை விட்டுக்கொடுக்காத காதல் என மிக இயல்பாக நடித்திருக்கிறார். 'எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லப்பா, எனக்கு ஒரு வீடு மட்டும் வாங்கித்தா' என்று கூறி வீட்டில் என்னவெல்லாம் வேண்டுமென்று விளக்கும் இடம் கவிதை. சிறுவன் தருண், நம் புன்னகைகளுக்கு முழு பொறுப்பு. க்யூட்டாக இருக்கிறான் என்று கூறி முடித்துவிட முடியாது, நன்றாக நடித்திருக்கிறான். வீட்டு உரிமையாளராக ஆதிரா, வீடு காட்டும் நண்பராக அருள் எழிலன் ஆகியோரும் சிறப்பு.

ஒளி உட்பட எந்த வித எக்ஸ்ட்ரா விஷயங்களும் இல்லாமல் படத்தை தூய்மையாகக் கொடுத்திருக்கிறார் செழியன். அந்த சிறிய வீட்டுக்குள்தான் கிட்டத்தட்ட பாதி படம் நடக்கிறது. ஆனாலும் விதவிதமான கோணங்களால் சலிப்பு ஏற்படாமல் கொண்டுசென்றது ஒளிப்பதிவாளர் செழியனின் வெற்றி. வசனங்கள், மிக இயல்பான உரையாடல்களாக அமைந்துள்ளன. வீடு கிடைத்துவிடவேண்டும் என்று நமக்குள் உண்டாகும் பதற்றம், படம் நம்முள் உறவாடுவதை உணர்த்துகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு தொழில்நுட்ப ரீதியில் எளிமையாக, இந்தப் படத்தின் ஜீவனுக்கேற்ப இருக்கிறது. அதே நேரம் வீடு கிடைக்குமா என்ற பதற்றத்தை உருவாக்குவதிலும் பங்குவகித்துள்ளது.

சிறு வட்டத்துக்குள் சுற்றும் கதை, காட்சிகள், வீடு கிடைப்பது என்பதைத்தாண்டி முக்கிய பாத்திரங்களின் வேறு எந்த விஷயங்களும்  பெரிதாகப் பேசப்படவில்லை என்ற குறைபாடெல்லாம் வழக்கமான சினிமா படங்களை ரசிக்கும் நமக்கு ஏற்படலாம். ஆனால், 'டுலெட்' இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படம். இசை, ஆக்ஷன், திருப்பங்கள், விறுவிறுப்பு என எல்லாம் எதிர்பார்ப்பவர்கள் இதெல்லாம் படமா என்று கேட்கலாம். பொறுமையான, உண்மையான திரைப்பட அனுபவத்துக்கு திறந்த மனதோடு செல்பவர்கள் இதுதான் படம் என்று சொல்லலாம்.                                                 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாபெரும் மதிப்பை பெறுகிறாரா? - ‘மகாராஜா’ விமர்சனம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Vijaysethupathi's maharaja movie review

சில ஆண்டுகளாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காத விஜய் சேதுபதி அதை மீட்டெடுக்க போராடி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதி இருந்தால் அந்தப் படம் வெற்றியும், அதுவே அது விஜய் சேதுபதி படம் என்றால் படம் தோல்வி அடைவதுமாய் ஒரு ட்ரெண்ட் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் சறுக்கல்களில் இருந்து மீண்டு எழுந்து மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்ப கோதாவில் மகாராஜாவாக குதித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த மஹாராஜா திரைப்படம் மகுடம் சூட்டியதா, இல்லையா?

காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறார். போலீசோ லட்சுமி என்றால் யார் என்ன என்று கேட்க அதற்குப் பல விதங்களில் மழுப்பும் விஜய் சேதுபதி ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல போலீஸோ இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். எப்படியாவது போலீசை இந்த வழக்கை விசாரிக்க செய்ய அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக விஜய் சேதுபதி சொல்ல போலீசும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கேசை கையில் எடுக்கிறது. யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க வேண்டும் எனத் துடிக்கிறார்? உண்மையில் விஜய் சேதுபதிக்கு என்னவாயிற்று? அவரது காயங்களுக்கு யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறார் இந்த மகாராஜா. 

சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத இந்தச் சூழலில் தன்னுடைய பிளஸ் எதுவோ அதைப் பிரதானமாக வைத்துக் கொண்டு அதே சமயம் கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையான படத்தைக் கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்து வெற்றி அணையில் ஏறி இருக்கிறார் விஜய் சேதுபதி. நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய ஒரு சமூகத்துக்கு தேவையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனைத் தனது சிறப்பான நான் லீனியர் திரைக்கதை மூலம் மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்து சூப்பர் ஹிட் படமாக இப்படத்தை கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். முதல் பாதி முழுவதும் மர்மமான முறையில் கதையை நகர்த்தி நக்கலும் நையாண்டியமாக சிரிக்க வைக்கும்படி பிளாக் காமெடி உடன் கதை நகர்ந்து இரண்டாம் பாதியில் நாம் எதற்கெல்லாம் சிரித்து ஏளனமாக இருந்தோமோ அதை எல்லாம் மிக சிறப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கும் பொழுது மிக மிக சீரியசான ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த மகாராஜா கொடுத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதி நாம் எதிர்பாராத பல்வேறு ட்விஸ்டுகளை உள்ளடக்கி காட்சிக்கு காட்சி ஆச்சரியங்களையும் சுவாரசியத்தையும் கூட்டி முடிவில் நெகிழ்ச்சியான திரில்லர் படமாக படம் நிறைவடைந்து தியேட்டரில் கைத்தட்டல்களை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி கரியரிலேயே இது ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க கவனிக்க கூடிய ஒரு படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே பல்வேறு விதமான லாஜிக் மிஸ்டேக்குகள் பல இடங்களில் படர்ந்து காணப்பட்டாலும் அவை பெருமளவு அயற்சி ஏற்படாதவாறு இருப்பது படத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருந்தும் அந்தச் சிறு சிறு குறைகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். 

Vijaysethupathi's maharaja movie review

விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பின் மூலம் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக கையாண்டு அதற்கு ஏற்றவாறு கதையும், திரைக்கதையும், அதற்கு உதவி செய்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறது. இவருக்கும் போலீசுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாது உடன் நடித்த மற்ற நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை வெற்றி படமாக மாற்ற உதவி செய்துள்ளனர். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பயமுறுத்தி இறுதிக் காட்சிகளில் நெகிழவும் செய்திருக்கிறார். போலீசாக நடித்திருக்கும் நட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நட்டி, அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அதைச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். 

Vijaysethupathi's maharaja movie review

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் தலை காட்டி இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் ஒரு நல்ல தேர்வு. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெற்றுள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சிங்கம் புலி, அதைச் சிறப்பாக செய்து இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் திவ்யபாரதி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா அனுபவ நடிப்பால் கவர்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே அவரவர் வேலைகளை மிக மிக சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க பெருமளவு பங்களிப்பு கொடுத்துள்ளனர். 

படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையைத் தனக்குக் கொடுத்த ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்தி மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அஜனீஸ் லோகநாத். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு சத்தம் தேவையோ ஒரு திரில்லர் படத்துக்கான இசையை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் மற்றும் பொது ரசிகர்களுக்கும் திருப்திகரமான படமாக இந்த மகாராஜா மாறி இருக்கிறது. சமூகத்துக்கு தேவையான கதையைக் கையில் எடுத்து நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து ஹாலிவுட் படத்திற்கு நிகரான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். மேலும், ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் நிறைவான படமாக அமைந்திருக்கிறது. நாயகர்களை காட்டிலும் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் நிரூபித்திருக்கிறது. 

 

மகாராஜா - மதிப்பு மிக்க ராஜா!

Next Story

மக்களின் மனங்களை வென்றாரா சூப்பர் ஹீரோ? - வெப்பன் விமர்சனம்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
sathyaraj vepan movie review

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் சமீப காலங்களாக நடித்து கைதட்டல் பெற்று வரும் நடிகர் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வெப்பன். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கும் அளவுக்கு அப்படி என்ன இந்தக் கதையில் நடிகர் சத்யராஜை கவர்ந்துள்ளது. அதேபோல் ரசிகர்களை இப்படம் எந்த அளவு ஈர்த்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.

சுதந்திரத்திற்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் சத்யராஜின் தந்தையும் ஜெர்மனிக்கு செல்கின்றனர். போன இடத்தில் ஹிட்லரின் படையில் சூப்பர் ஹியூமன்களை தயாரித்து அவர்கள் மூலம் உலகத்தை வீழ்த்தும் ஒரு மருந்தை ஹிட்லர் படை கண்டுபிடிக்கிறது. அம்மருந்தை இந்தியாவிற்கு கடத்தி வரும் சத்யராஜின் தந்தை அதைத்தன் மகன் சத்யராஜுக்கு செலுத்தி அவரை சூப்பர் ஹியூனாக மாற்றி விடுகிறார். இதை அடுத்து தானுண்டு தன் குடும்பம் உண்டு என வசித்து கொண்டிருக்கும் சத்யராஜை ஹிட்லர் படை பின் தொடர்ந்து வந்து அவர் குடும்பத்தை அழிக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் சத்யராஜ் மற்றும் அவருடைய மகன் வசந்த் ரவி அந்த விபத்தில் தனித்தனியாக பிரிகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் காப்பாற்றப்படுகிறது.

sathyaraj vepan movie review

இதைக் கண்ட யூட்யூபரும், சமூக ஆர்வலருமான வசந்த் ரவி அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய சூப்பர் ஹுமனை தேடி காட்டுக்குச் செல்கிறார். அதேசமயம் பிளாக் சொசைட்டி என்ற கூட்டத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் ராஜீவ் மேனன் தன் சகாக்கள் ஒரு சூப்பர்  ஹியூமனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவரும் அந்தச் சூப்பர் ஹுமனைத் தேடி காட்டுக்குச் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து அந்த சூப்பர் ஹியூமன் யார்? அவரை வசந்த் ரவி மற்றும் ராஜீவ் மேனன் கண்டுபிடித்தார்களா, இல்லையா? சத்யராஜுக்கும் வசந்த் ரவிக்கும் இருக்கும் உறவு என்ன ஆனது? இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

ஹாலிவுட் டிசி மார்வெல் போன்ற கம்பெனிகளில் உருவாகும் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் சமீப காலங்களாக வரவேற்பைப் பெறாமல் இருக்கும் இந்தச் சூழலில் அதைச் சரிகட்டும் வகையில் தமிழில் ஊரில் சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் குகன் சென்னியப்பன். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சில் எப்படி ஒரு அவெஞ்சர்ஸ் ஃபேமிலி இருக்கின்றதோ அதேபோல் இங்கு ஒரு சூப்பர் ஹீரோ பேமிலியை உருவாக்கும் முயற்சியில் வெப்பம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் இதன் இரண்டாம் பாகத்திற்கான வீடும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோ பேமிலி வைத்து ஒரு யூனிவர்சல் உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கும் படக்குழு அதே முயற்சியைப் படத்தின் திரை கதையிலும் இன்னமும் நன்றாக கவனம் செலுத்தி கொடுத்திருந்தால் இப்படம் ரசிகர்களிடையே இன்னும் கொஞ்சம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

sathyaraj vepan movie review

சூப்பர் ஹீரோ மற்றும் அதைச் சுற்றி இருக்கும் யூனிவர்ஸ் என அந்தந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் ஏனோ கதைக்கும் திரைக்கதைக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுக்க தவறி இருக்கிறார். இதனால் படம் ஆரம்பித்து முடியும் வரை ஆங்காங்கே தொய்வுகள் ஏற்படுகிறது. இதனால் பார்ப்பவர்களுக்கு அயற்சியும் ஏற்படுகிறது. இருந்தும் படத்தின் இறுதி கட்ட காட்சிகள் சற்று பிராமி சிங்காக அமைந்து பார்ப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உணர்வை கொடுத்து அடுத்தடுத்த பாகங்களுக்கான லீடை கொடுத்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்து படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சத்யராஜ் கதாபாத்திரத்தை உணர்ந்து சூப்பர் ஹீரோ வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக மகன் வசந்த் ரவி இரட்டை வேடத்தில் தனக்கு என்ன வருமோ அதே நடிப்பை இப்படத்திலும் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரின் கதாபாத்திரமும் சத்யராஜின் கதாபாத்திரமும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. பிளாக் சொசைட்டி கூட்டத்தில் வரும் ராஜீவ் மேனன் வேலு பிரபாகரன் ஆகியோரின் கூட்டணி படத்திற்கு வில்லன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன. அவை வழக்கமான வில்லத்தனம் காட்டி விட்டு கடந்து சென்று விடுகிறது. நாயகி தான்யா ஹோப் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். உடன் நடித்த மற்ற முக்கியமான கதாபாத்திரங்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதைச் செவ்வனே செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

sathyaraj vepan movie review

ஜிப்ரான் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை பல இடங்களில் மிரட்டி இருக்கின்றன. குறிப்பாக ஆக்சன் காட்சிகளிலும் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சிறப்பு. பிரபு ராகவ ஒளிப்பதிவில் சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட vfx காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளையும் நேர்த்தியாக காட்டி இருக்கின்றனர். படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளும் காஸ்டிம்களும் கருப்பு நிறத்தில் இருப்பதால் பெரும்பாலும் இருட்டுக்குள் நடக்கும் விஷயங்களை நல்ல வெளிச்சமாக காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன்.

தான் நினைத்த விஷயங்கள் மிக பிரம்மாண்டமாக இருந்தாலும் அவை காட்டிய விதத்தில் அதே பிரம்மாண்டத்தைக் காட்ட தவறியதால் இப்படத்தில் ஆங்காங்கே அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரை கதையிலும் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. கதையும் இன்னும் கூட ஆழமாகவும் அழுத்தமாகவும் இருந்திருக்கலாம். இருந்தும் இப்படியான முயற்சிகளை கையில் எடுத்து அதற்கு ஏற்றார் போல் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் ஆக்‌ஷ்ன் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுக்க எடுத்த முயற்சிக்காகவே இந்த வெப்பனை ஒரு தடவை பயன்படுத்தலாம்.

வெப்பன் - கூர்மை குறைவு!