வெற்றி இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட் லிஸ்ட். இப்படத்தை மற்றொரு வெற்றியை இயக்குநரான கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. தற்போது வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா?
ஈ, எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத விஜய் கனிஷ்கா ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர் தன் தாய் சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா ஆகியோருடன் வசிக்கிறார். ஒரு நாள் இவரது தாயையும் தங்கையையும் முகமூடி அணிந்த ஒருவர் கடத்தி விடுகிறார். அவரை கண்டுபிடிக்க விஜய் கனிஷ்காவுடன் இணைந்து போலீஸ் ஆபீஸர் சரத்குமாரும் களத்தில் குதிக்கிறார். இருவரும் அந்த முகமூடி ஆசாமியை தேடும் சமயத்தில் அந்த முகமூடி சாமி ஹீரோ விஜய் கனிஷ்காவை தொடர்பு கொண்டு வில்லன் கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜுவை கொலை செய்தால் தாயையும் தங்கையையும் விடுவிப்பதாக கூறுகிறார். தன் வாழ்நாளில் கொசுவை கூட அடித்துக் கொள்ளாத நாயகன் விஜய் கனிஷ்கா, தன் தாய்க்காக யாருக்கும் தீங்கு நினைக்காத கொள்கைகளை விட்டுவிட்டு அந்த வில்லனை போட்டு தள்ளுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் அவரை மீண்டும் தொடர்பு கொள்ளும் முகமூடி மனிதன் மீண்டும் டாக்டர் கௌதம் மேனனை கொலை செய்ய தூண்டுகிறார். அப்படி அவர் இந்த கொலையையும் செய்தால்தான் அவரின் தாயையும் தங்கையையும் விடுவிப்பதாக கூறுகிறார். ஏற்கனவே செய்த ஒரு கொலையால் மிகுந்த வேதனையும் மன உளைச்சலையும் கொண்டுள்ள நாயகன் விஜய் கனிஷ்கா கௌதம் மேனனை கொலை செய்தாரா இல்லையா? தன் தாய் மற்றும் தங்கையை முகமூடி மனிதனிடமிருந்து மீட்டாரா, இல்லையா? அந்த முகமூடி மனிதனை போலீஸ் ஆபீஸர் சரத்குமார் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
கொரோனா காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர். படம் ஆரம்பம் ஆகும் பொழுது சாதரண படம் போல் ஆரம்பித்து போகப் போக வேகம் எடுத்து கதையில் ஒரு பிடிப்பை உருவாக்கி ரசிகர்களை சீட்டு நுனியில் வர வைக்கும் அளவுக்கு சிறப்பான த்ரில்லர் படமாக இப்படம் அனைந்திருக்கிறது. படம் கதைக்குள் பயணம் பட ஆரம்பிக்கும் சமயத்தில் தொடங்கி முடியும் வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் மிக வேகமாகவும், அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை உண்டாக்கும் படியாக சிறப்பாக நகர்ந்து பார்ப்பவர்களுக்கு பதட்டத்தையும் கொடுத்து கைதட்டலையும் பெற்று இருக்கிறது. குறிப்பாக படத்தின் சஸ்பென்ஸை இறுதிக்கட்ட காட்சி வரை எடுத்துச் சென்று நிறைவான திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். அதற்கு முத்தாய்ப்பாக வரும் சென்டிமென்ட் காட்சியும் சிறப்பாக அமைந்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்கிறது. இருந்தும் இரண்டாம் பாதியில் இருந்த அழுத்தமும் விறுவிறுப்பும் முதல் பாதியில் சற்றே இல்லாததால் அயர்ச்சியை கொடுக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் கனிஷ்கா அறிமுக நாயகன் என்ற உணர்வை தர மறுக்கும் படியாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் நடிப்புக்கு பெரிதாக ஸ்கோப் இருக்கும் காட்சிகள் அதிகம் இல்லாமல் இருந்தாலும் கொடுத்த காட்சிகளை சிறப்பாக நடித்து அதேசமயம் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் சரத்குமார் தன் சிறப்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனாக வரும் இவரின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது. நாயகனின் தாயாராக வரும் சித்தாரா, தங்கையாக வரும் அபி நட்சத்திரா, நண்பனாக வரும் பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நாயகிகளாக வரும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், வில்லன்கள் ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் அவரவருக்கான வேலையை மிக சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக அப்பாவாக வரும் சமுத்திரகனி சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார்.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. பாடல்களை காட்டிலும் சத்யாவின் பின்னணி இசை சிறப்பு. பெரிதாக பாடல்கள் இல்லாமல் இரண்டரை மணி நேரம் படத்திற்கு என்ன தேவையோ அதற்கான காட்சிகளை மையமாக வைத்து படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருந்து இறுதியில் ஒரு நல்ல மெசேஜை கூறி பார்ப்பவர்களுக்கு நிறைவான படமாக அமைந்திருக்கிறது இந்த ஹிட் லிஸ்ட்.
ஹிட் லிஸ்ட் - நேர்த்தியான திரில்லர்!