Skip to main content

விடுதலை வெற்றியை சூரி தக்க வைத்தாரா? - ‘கருடன்’ விமர்சனம்!

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
soori garudan movie review

விடுதலை படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு கதையின் நாயகனாக மீண்டும் கோதாவில் குதித்திருக்கிறார் முன்னாள் காமெடி நடிகர் சூரி. விடுதலைப் பெற்றுத் தந்த பெரும் வெற்றியை இந்த படம் தக்க வைத்ததா...?


தேனியில் ஒரு கிராமத்தில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடம் சென்னையில் இருக்க அதனை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார் பத்திரப்பதிவு அமைச்சர் ஆர்.வி.உதயகுமார். இதற்காக அந்தக் கோயிலுக்குள் இருக்கும் செம்பு பட்டயத்தை கைப்பற்ற அந்த ஊருக்கு நேர்மையான இன்ஸ்பெக்டர் சமுத்திரகனியை அனுப்பி வைக்கிறார். அவருடன் உதவிக்கு அதே ஊரில் தியேட்டர் வைத்து அதனுள் கள்ளச் சாராயம் காய்ச்சி லோக்கல் சரக்கில் கலந்து கொள்ளச் சந்தையில் விற்கும் மைம் கோபியை சமுத்திரக்கனிக்கு உதவியாக அனுப்புகிறார். இவர்கள் அந்தக் கோயிலின் டிரஸ்டியாக இருக்கும் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோரை மீறி அந்த செம்பு பட்டயத்தை திருட முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களை மீறி அந்த செம்பு பட்டயத்தை இவர்களால் திருட முடியவில்லை. இதனால் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோருக்குள் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாக மூன்று பேருக்குள்ளும் பிரச்சனை உருவாகி பிரிவினை ஏற்பட்டு சசிகுமாரும் கொல்லப்படுகிறார். இதையடுத்து அந்த செம்பு பட்டயம் கயவர்கள் கையில் சிக்கியதா, இல்லையா? இதை தடுக்க சூரி எப்படி எல்லாம் போராடுகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

soori garudan movie review

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ரூரல் சம்பந்தப்பட்ட நட்புகளுக்குள் நடக்கும் பழிவாங்கல் கதையை மீண்டும் கையில் எடுத்து அதை ரசிக்கும்படி கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குநர் துரை செந்தில் குமார். படத்தின் கதையும் திரைக்கதையும் ஏற்கனவே நாம் பார்த்து பழகியபடி இருந்தாலும் கதையின் மாந்தர்களும், காட்சிகளும் பிரஷ்ஷாக அமைந்து அதே சமயம் துடிப்பாகவும் இருந்து காட்சிகளுக்கு உயிரூட்டி படத்தை பாஸ் மார்க் வாங்க செய்திருக்கிறது. அதேபோல் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஆங்காங்கே சிறப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையும் குறிப்பாக இடைவேளை காட்சியும் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்து கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்ஸை கொடுத்து தியேட்டரில் கைத்தட்டல் பெற்று படத்தை கரை சேர்த்திருக்கிறது. முதல் பாதி வேகமாக நகர்ந்து இரண்டாம் பாதியில் நட்பு, துரோகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கதை பயணித்து இறுதியில் மிக வேகமாகவும், அதேசமயம் நிறைவாகவும் முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. கதையும் காட்சி அமைப்புகளும் ஒரு நாயகனை மட்டும் மையப்படுத்தி இல்லாமல் சசிகுமார் மற்றும் சூரியை மையப்படுத்தி கூட்டணி அமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. அதுவே இப்படத்தில் ஆங்காங்கே சில அயர்ச்சியான விஷயங்கள் தென்பட்டாலும் அவற்றை மறக்கடிக்க செய்து ரசிக்க வைத்திருக்கிறது. 

soori garudan movie review

விடுதலை படத்திற்குப் பிறகு நடிப்பில் வேறு ஒரு பரிமாண வளர்ச்சியை அடைந்திருக்கிறார் முன்னாள் காமெடி நடிகர் சூரி. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மிகச் சிறப்பாக செய்து நன்றாக கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக பொய் சொல்ல முடியாமல் கடகடவென்று உண்மையை உடைக்கும் காட்சிகளிலும், விசுவாசத்திற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபமும் மிக மிக சிறப்பாக அமைந்து அவரை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. தமிழில் முன்னணி நடிகர்களின் வரிசையில் சூரி இணைவது நிச்சயம். இவருக்கு பக்கபலமாக நடிகர் சசிகுமார் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் நண்பர்களின் துரோகத்துக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் வழக்கமாக அந்தந்த கதாபாத்திரத்திற்கு என்னவெல்லாம் செய்து சிறப்பு கூட்டுவாரோ அதையே இப்படத்திற்கும் செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

சைலன்ட் வில்லனாக நடித்திருக்கும் உன்னி முகுந்தன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கும் சூரிக்கும் சசிகுமாருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து படத்தை தாங்கி பிடித்து இருக்கிறது. நேர்மையான போலீசாக வரும் சமுத்திரகனி நேரம் பார்த்து காலை வாரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக  நடித்திருக்கிறார். தேர்ந்த அரசியல்வாதியாக வரும் ஆர்.வி. உதயகுமார் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையா அதை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரத்தில் வரும் மைம் கோபியும் நிறைவாக நடித்திருக்கிறார். நாயகிகளாக வரும் ரேவதி சர்மா, சிவதா, ரோஷிணி, ஹரி பிரியன் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக மிக சிறப்பாக செய்திருக்கின்றனர். அம்மாவாக வரும் வடிவுக்கரசி சிறப்பு. 


யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னணி இசை மிக சிறப்பு. குறிப்பாக இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் வாசிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் போன்று கமர்சியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வந்த துரை செந்தில்குமார் இந்த தடவை கமர்சியலை சற்று குறைத்துக் கொண்டு உணர்ச்சிகளுக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சற்று கிராமத்துக்கு பக்கம் சென்று அதை சிறப்பாக எடுத்து ரசிகர்களுக்கு நிறைவான படத்தை கொடுத்திருக்கிறார். 


கருடன் - விசுவாசம்!  

சார்ந்த செய்திகள்

Next Story

பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Legend Saravan's new film started

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் இருந்து வந்தது. 

இதனிடையே எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கும் புது படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் புது கெட்டப்புடன் இருக்கும் சில புகைப்படங்களை லெஜண்ட் சரவணன், அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், இயக்குநர் துரை செந்தில் குமார் மற்றும் லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தை உறுதி செய்யும் வகையில் அந்தப் படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பெயரிடபடாத இந்தப் படத்தின் போட்டோ ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை லெஜண்ட் சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘New game started’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

 

Next Story

வெற்றியைக் கொண்டாடிய கருடன் படக்குழு (படங்கள்)

Published on 14/06/2024 | Edited on 14/06/2024

 

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்மையில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன்  பட சாக்ஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சூரி, சசிகுமார், டைரக்டர்  துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,  டைரக்டர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.குமார், ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள் : எஸ்.பி.சுந்தர்