Skip to main content

நீதிமன்றம் சென்ற காரணம்; நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
tamil film active producers association explain review ban

கங்குவா படம் சமீபத்தில் சிறப்பு காட்சியுடன் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது தொடர்பாக ஜோதிகா, “கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், படம் வெளியாகிய இரண்டு வார காலத்துக்கு படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது உள்ளிட்ட சில கோரிக்கைகளை திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வைத்திருந்தார்.   

இதையடுத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்களுக்கு யூ டியூப் சேனல்களில் வரும் பொதுமக்கள் விமர்சனம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் யூ டியூப் சேனல்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுக்கத் தடை செய்து முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் செய்யும் நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிடத் தடை கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது மறுப்பு தெரிவித்து விமர்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல்துறையிடம் புகாரளிக்கலாம் என கருத்து கூறினார். 

இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்களை தடை செய்வது பற்றி விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் சிவா மற்றும் செயல் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல.

அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான் ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான். ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது. பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம். மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். நமது சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை

அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. எனவே வழக்கு நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு சரியான வழிமுறை (Guidelines)வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான PRO-வுக்கு பரிந்துரைக்கும். டெலிவிஷன், பத்திரிக்கை, யூடியூப் (YouTube) சேனல்கள், வலைத்தளங்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show வுக்கு வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press Show-வுக்கு மேலே குறிப்பிட்டவர்கள் வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம். தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது எனவே, இந்த விளக்கத்தையும், செயல்முறையையும், தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்