Skip to main content

“வரலாறை அறிந்து கொள்ளாமல்...” - விடுதலை 2 குறித்து ராஜு முருகன் 

Published on 26/12/2024 | Edited on 26/12/2024
raju murugan about vetrimaaran viduthalai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்தது. 

பலரது எதிர்பார்ப்பை தாண்டி கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் பல்வேறு உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒன்று சேர்த்து இயக்கியிருந்த வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் எதற்காக பொது வாழ்க்கைக்கு வந்தார், பின்பு ஏன் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு மாறினார், அதன் பிறகு அவர் என்ன ஆனார்... என பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் படம் பதிலளிக்கிறது. 

இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., பி.சி.ஸ்ரீராம்,மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டி இருந்தனர். அந்த வகையில் இயக்குநர் ராஜு முருகன், அவரது எக்ஸ் பதிவில், “விடுதலை 2 அபூர்வமான, அற்புதமான படைப்பு. நமது வரலாறை அறிந்து கொள்ளாமல், நமது இலக்கை அடைய முடியாது என்ற பாடத்தை இந்த தலைமுறைக்கு கையளிக்கிறது இந்த படம்.

மக்கள் அரசியல் களத்தில் எண்ணற்ற இடதுசாரி தோழர்கள் செய்த தியாகம், சிந்திய ரத்தத்தின் சில துளிகளை நமது நெஞ்சில் அழியாமல் படர விடுகிறது. மிக மிக மலினமான இன்றைய அரசியல் சூழலில் நம் ஒவ்வொருவருக்கும் தேவையான உணர்வு... விடுதலை!  இதை நிகழ்த்தி காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாத்தியாராகவே வாழ்ந்து காட்டியிருக்கும் விஜயசேதுபதிக்கும், சூரி, எல்ரெட் குமார், வேல்ராஜ், உள்ளிட்ட படக்குழுவினருக்கும் எங்கள் இளையராஜா சாருக்கும் எப்போதைக்குமான அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்