மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத் த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
பின்பு 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருகிறது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்” என பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் இதை ரஞ்சித் மறுத்திருந்தார். பின்பு மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதே போல் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த ரியாஸ் கான் மீதும் நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பினார். அக்கடிதம் இன்னும் ஏற்கபடவில்லை. ரியாஸ் கான் தன் மீதான் பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நடிகைகள் பாலியல் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நடிகை மினுமுனீர் கடந்த 2012ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது நடிகர் மற்றும் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் தனக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மலையாளத் திரையுலகை விட்டுவிட்டு சென்னையில் குடிபெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேரள அரசு நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.