‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘டெஸ்ட்’ படத்தை கைவசம் வைத்துள்ள சித்தார்த் தனது 40வது படத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கனேஷ் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து கடந்த சில மாதங்களாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு 3 பி.ஹெச்.கே.(3BHK) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
டைட்டில் டீசர் பார்க்கையில் ஒரு நடுத்தர வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி ஆகிய குடும்பத்தினர் இருக்கும் நிலையில் அந்த வீட்டில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு காதல், காமெடி கலந்த ஒரு ஃபீல் குட் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. அதற்கேற்றார் டீசரில் ‘இது ராஜா கதை இல்ல... நம்ம வீட்ட பத்தின கதை’ என்று சித்தார்த் பின்னணியில் பேசுகிறார். இப்படம் இந்தாண்டு கோடையில் வெளியாகவுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் தற்போது படத்திற்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. அதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.