Skip to main content

"முல்லை சித்ரா நிலை உனக்கும் ஏற்படும் என எச்சரித்தார்”... பகீர் கிளப்பும் சீரியல் நடிகை ஜெனிஃபர்!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

jenifer

 

‘வானத்தைப் போல’, ‘செம்பருத்தி’ உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை ஜெனிஃபர், சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் காதலித்து வந்த நவீன்குமார் என்பவர் தன்னை அரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனிஃபர், தனக்கு நடந்தது குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில், ஜெனிஃபர் - நவீன்குமார் விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக அறிய நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜெனிஃபரை சந்தித்தோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"என்னைத் தாக்கிய நவீன்குமார், அவரது தந்தை உதயகுமார் மற்றும் மணலி இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு முதல் திருமணம் நடந்து, அதனுடைய விவாகரத்து வழக்கு தற்போது நடந்துகொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நவீன்குமார் என்னை அணுகுகிறார். எனக்கு முதலில் விருப்பமில்லாததால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். நான் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்று அவர் உறுதியளித்ததாலும் அவரது குடும்பமும் போலீஸ் குடும்பம் என்பதால் நம்மை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பியதாலும் பின்னர் சம்மதித்தேன். நவீன்குமார் கொஞ்ச நாட்கள் வேலையில்லாமல் இருந்தார். அவ்வப்போது என்னிடம் பணம் கேட்பார்; நானும் கொடுப்பேன். ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமான தொகை கேட்க ஆரம்பித்தார்.

 

மார்ச் 25 அன்று, சீரியல் ஷூட்டிங்காக நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். அங்கு, அவரும் என்னுடன் இருந்தார். திடீரென 20 ஆயிரம் பணம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார். மாதக் கடைசி என்பதால் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. உடனே ஆத்திரமான நவீன்குமார், உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் தவறாக இணைத்துப் பேசி என்னை அடித்து, கடித்து துன்புறுத்தினார். என் கன்னத்திலுள்ள இந்தத் தடம் அவர் அன்று கடித்து வைத்ததில் ஏற்பட்டதுதான். இது நடந்தது நான் தங்கியிருந்த அறையில். அந்த நேரத்தில் அனைவருக்கும் தெரிந்தால் வேலை ரீதியாக எனக்குப் பாதிப்பு ஏற்படலாமென்று எண்ணி நான் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அதன்பிறகு, இரு குடும்பத்தாரும் தலையிட்டு பேசியதால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. பின் நாங்கள் வழக்கம்போல பழகி வந்தோம்.

 

ஏப்ரல் 14 அன்று, காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென 5 லட்சம் பணம் வேண்டுமென்று கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. கார் அவர்தான் ஓட்டினார். நான் இல்லையென்று கூறியவுடன் காரில் வைத்தே என்னை அடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், மேலாடையைக் கிழித்து, என்னை அரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். அரை நிர்வாணமாக இருந்ததால் என்னால் கீழே இறங்கி ஓடமுடியவில்லை. அன்று இரவு முழுவதும் காரில் என்னை உட்கார வைத்து சென்னை முழுக்க சுற்றிக்கொண்டே இருந்தார். என் கையில் ஃபோனும் இல்லை. அதனால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மதுரவாயல் அருகேயுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த பையனிடம் ஃபோன் வாங்கி என் அம்மாவுக்கு ஃபோன் செய்ய முயற்சித்தேன். உடனே ஃபோனைப் பறித்து கட் பண்ணிவிட்டார். நான் 100க்கு ஃபோன் செய்துவிடுவேன் என்று எச்சரித்ததால் அவருடைய அம்மாவிற்கு மட்டும் ஃபோன் செய்ய அனுமதித்தார். பின், அவர் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்தவற்றைக் கூற, “என் பையன் என்ன சொல்றானோ அதைக் கேளு” எனக் கேஷுவலாக அவர் கூறினார். பின், காரில் அவர் வீட்டிற்கு கூட்டிச் சென்றார். அவர் வீட்டிற்கு அருகே சென்று கார் நின்றதும், நான் இறங்கி வேகமாக ஓடி அவர் அம்மாவிடம் சென்றேன். என்னுடைய உடைகள் கிழிந்துவிட்டதால் நான் நவீன் சட்டையைப் போட்டிருந்தேன். அதைக் கழட்டிக் காட்டி, என்னை அடித்ததை அவரிடம் கூற, அவர் அதைப் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. 

 

அதன் பிறகு, என் வீட்டிற்கு சென்றேன். அப்போதும் போகும் வழியெங்கும் என்னை அடித்துத் துன்புறுத்தி வீடியோ எடுத்தார். அரை நிர்வாண வீடியோவை வைத்து என்னை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம். “நீயும் ஒரு சித்ரா மாதிரி ஆகப்போறியா... ஹோட்டல்ல வச்சு உன்னையும் சாகடிச்சுடவா” என்றெல்லாம் என்னை மிரட்டினார். பின்னர், என் அம்மா நவீன்குமாரை எச்சரித்து அனுப்பிவிடுகிறார். அவருடைய அம்மாவிடம் எங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார். அவர் அம்மா, ஐந்து லட்சம் பணம் தர வேண்டும், இல்லையென்றால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என எங்களை மிரட்ட ஆரம்பித்தார். ஓர் இடத்தில் வைத்து இரு தரப்பும் சமரசம் பேசினோம். “இந்த வீடியோ வெளியே வந்தால் உன்னுடைய கேரியரே முடிஞ்சிடும்... என் கணவர் கமிஷனர் ஆஃபிசில் ட்ராபிக் ஜோன்ல சூப்ரின்டென்ட்டா இருக்காரு... பெரிய ஆபிஸர்ல இருந்து தர லோக்கலான ரௌடிகள் வரை எங்களுக்கு ஆட்கள் தெரியும்” என்று அவர் அம்மா என்னை மிரட்டினார். 

 

பின், என் அப்பா பேசிய பிறகு, இனி எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டோம் என அவர் அம்மா உறுதியளித்தார். அன்று மாலை என்னுடய காரில் நான், என் அம்மா, அப்பா, தங்கச்சி, பாட்டி வெளியே சென்றோம். அப்போது எதிரே இடிப்பதுபோல ஒரு கார் வந்து நின்றது. அதில், நவீன், அவர் தம்பி, அம்மா, அப்பா, சில அடியாட்கள் இருந்தனர். அந்தக் காரிலிருந்து இறங்கி வந்த அடியாட்கள் என் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, காருக்குள் வைத்தே என்னை அடித்தனர். என் அந்தரங்க உறுப்பை தொட்டும் அசிங்கப்படுத்தினார்கள். நான் உடனே என் தம்பிக்கு ஃபோன் பண்ணேன். அவன் வர்றதுக்குள்ள ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு என் அப்பாவை அடித்தனர். என் தங்கையின் உடையைக் கிழித்து நடுரோட்டில் வைத்து அவளை மானபங்கப்படுத்தினார்கள். நான் உடனே 100க்கு போன் செய்துவிட்டேன். சம்பவம் முடிந்த பிறகுதான் போலீஸ் வந்தது. அப்போது, அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். நான் பிறகு மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். இன்ஸ்பெக்டர் சிட்டி பாபு அங்கு இருந்தார். நான் புகார் அளிப்பதற்குள் நவீன்குமார் அப்பா அங்கு வந்து, முதல் திருமணத்தை மறைத்துவிட்டு அவர் மகனை ஏமாற்றியதாக என் மீது புகார் கொடுத்தார். நான் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கக் கோரி உதயகுமாரும் இன்ஸ்பெக்டர் சிட்டி பாபுவும் என்னை வற்புறுத்தினார்கள். நான் வாபஸ் வாங்க முடியாது என்று கூறிவிட்டேன். என்னுடைய குடும்பத்தினரைத் தாக்கியதற்கு நவீன்குமாரும் அவரது தந்தை உதயகுமாரின் செல்வாக்கும்தான் காரணம். அது இல்லாமல் மூன்று ரௌடிகளுடன் நடுரோட்டில் இறங்க முடியாது. ஆனால், உதயகுமார் போலீஸ் என்பதால் எப்.ஐ.ஆரில் அவர் பெயரை சேர்க்க மறுக்கின்றனர். இதற்கெல்லாம் உடந்தை இன்ஸ்பெக்டர் சிட்டி பாபுவும்தான். அதனால்தான் அவங்க மூன்று பேர் மீதும் கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்துள்ளேன்" என விரிவாக விவரித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்