
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, "மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து திருவாரூரில் உள்ள 1 திரையரங்கில் எதிர்ப்பின் காரணமாக இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராயா நகரில் உள்ள அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.