Skip to main content

தேர்தலில் எனக்கு நம்பிக்கையில்லை - பா.ரஞ்சித் 

Published on 09/03/2018 | Edited on 10/03/2018
pa ranjith


'அர்ஜுன் ரெட்டி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'நோட்டா' படத்தில் நடிக்கிறார். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில்  இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு பேசும்போது...."ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன். 
 

pa ranjith


இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில், தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்"என்றார். 

சார்ந்த செய்திகள்