Skip to main content

தமிழ் திரையுலகம் நடத்தும் ‘கலைஞர் 100’ விழா தள்ளிவைப்பு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
kalaignar 100 event postponed

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று இதுவரை நடந்த நிகழ்வில் ஜெயம் ரவி, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். 

இதனிடையே தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். 

இதையடுத்து திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், இந்த நிகழ்ச்சி வருகிற 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவித்தனர். மேலும் டிசம்பர் 23 மற்றும் 24 அன்று இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாது என தெரிவிக்கபட்டது. மேலும் ரஜினி, கமலை தொடர்ந்து விஜய், அஜித்திற்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாக கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில் கலைஞர் 100 விழா தள்ளிப் போகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். மேலும், முதல்வரும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளை கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்