Skip to main content

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய விஜய் படம்... தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

K Rajan

 

ஸ்ரீமணி இயக்கத்தில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்மணி பாப்பா’. ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, சாய் தேவ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். "நீங்கள் வந்தால் களை கட்டும்" என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்றுதான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.  தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் காலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும் என்று சிலர் கேட்டார்கள். உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும்தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள்.

 

ad

 

எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்... என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிபெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர்தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா? 

 

அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்