Skip to main content

"மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு முக்கியக் கோரிக்கை..!'' - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் அறிக்கை!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

jgmngc

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,


''மே 7 டாஸ்மாக் திறப்பு... ஓர் இந்தியக் குடிமகனின் கோரிக்கை!

அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர்/ நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். தமிழ் வார இதழின் பதிப்பாளர்/ முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன். இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கியக் கோரிக்கை... 

 

இன்று, கோவிட்- 19 என்கின்ற கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தைக் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமியுடன் நடத்தி வருகின்றன. மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் உலக நாடுகள் போற்றும் அளவிற்குத் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி வரும், பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். அதை அறிந்து தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரையுலகினர், அரசு ஊழியர்கள், தனி மனிதர்கள் அவ்வளவு ஏன் சிறுவர், சிறுமியர்கள் கூட தங்கள் உண்டியல் சேமிப்புத் தொகையைப் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் நிவாரண நிதிகளாக வழங்கி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. அரசும் பாரபட்சமின்றி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது. ஆயிரம் ரூபாய் பணம், இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், அம்மா உணவகத்தில் இலவச உணவு என அரசு ஒரு தாயின் கரங்களைப்போல் மக்களை அரவணைத்துக் கொள்கிறது. அதை மறுக்க முடியாது. 

 

அதே நேரத்தில், ஊரடங்கின் காரணமாக மூடிவைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் மே 7 ஆம் தேதி முதல் திறக்கப் போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குக் கள்ளச்சாராயம் பெருகிவருவது காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, அறியாமையில் பலர் கெமிக்கல்களைக் கலந்து குடிப்பது, அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் இங்கிருந்து பலர் அங்கு படையெடுப்பது போன்றவையும் நடக்கிறது. அதனால், இங்கேயே கடையைத் திறக்க அரசு முன் வந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு இந்தியக் குடிமகனாக எனக்கிருக்கும் அடிப்படை உரிமையில் ஒரு கோரிக்கையை, ஆதங்கத்தை முன் வைக்கிறேன். அதாவது, ‘நாடு இப்பொழுது இருக்கும் ஆபத்தான சூழலில், வயிற்றுக்கும், உயிருக்குமான போராட்டக் களத்தில், டாஸ்மாக்கிற்கு வந்து இவ்வளவு பணம் கொடுத்து மதுவை வாங்குபவர்களின் ஆதார் எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும்’. அப்படி செய்வதன் மூலம், அவர்களுக்கு அரசாங்கம் அடிப்படை உதவியாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், அம்மா உணவகத்தில் இலவச உணவு, இலவச கேஸ் மானியம் போன்றவற்றை ரத்து செய்யலாம். அவர்கள் பெயரைச் சலுகை தேவையற்றோர் பட்டியலில் சேர்க்கலாம். 

 

காரணம், அடிப்படை வசதிகள் தேவைப்படுவோர்கள் மத்தியில் மதுவுக்காக ஆடம்பரச் செலவு செய்யும் அளவிற்குப் பணம் இருப்பவர்களுக்கு அரசின் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படபோவதில்லை. அரசின் உதவிகள் தேவைப்படுவோருக்குப் போய்ச் சேரட்டும். இன்னொரு முக்கிய விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘வெறும் வசதியானவர்களும், மேல் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும்தான் குடிக்கிறார்களா? ஏழை, எளிய மக்கள் குடிப்பதில்லையா? அவர்கள் பாதிக்கப்படுவார்களே...?’ என்று கேட்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதின் மூலம் குடிப்பவர்கள் தாமாகவே குடும்பத்தின் பொருளாதார நலனைக் கருதி குடிப்பழக்கத்தை நிறுத்தக்கூடும். அவர்கள் வாழ்வு பொழிவுமிக்கதாக மாறும். அவர்கள் குடும்பம் அன்புசூழ் இல்லமாக மாறும். மக்கள் நலன் கருதி அரசு, மேற்கண்ட கருத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு,
ஜே.எஸ்.கே. சதீஷ்குமார்

 

சார்ந்த செய்திகள்