
உண்மை சம்பவ அடிப்படையில் வரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதை படமாக்கும் முயற்சியில் தொடர்ந்து திரைப்பட பிரபலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் பாலிவுட் திரையுலகம் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை அவர்கள் கைவிட்டதே இல்லை. ஏற்கனவே ‘பார்டர்’, ‘உரி; தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’, ‘மிஷன் மஜ்னு’, ‘ஷெர்ஷா’, ‘ஸ்கை ஃபோர்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் இந்தியா - பாகிஸ்தான் போர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடங்கியுள்ள போர் பதற்ற சூழ்நிலையில் பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடி சம்பவத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் இப்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. அதாவது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் இதை அடிப்படையாக வைத்து இன்னும் பல்வேறு தலைப்புகளை பல முன்னணி தயாரிப்பாளர்கள் தங்கள் வசம் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களை அணுகியுள்ளனர்.
இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட மொத்தம் மூன்று சங்கங்களில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் முதலில் பதிவு செய்ததால் அவர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ‘டீ - சீடிஸ்’, ‘ஜீ ஸ்டூடியோஸ்’ நிறுவனங்கள் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது.