Skip to main content

பாலியல் புகார்; நடன இயக்குநர் ஜானி கைது 

Published on 19/09/2024 | Edited on 20/09/2024
dance master jani arrested

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் நடிகர்கள் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார். இவர் நடனம் அமைத்த அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே...' என்ற பாடலுக்காக 2022 ஆம் ஆண்டு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது வாங்கவுள்ளார். 

இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது நிரம்பிய அவரது உதவி நடன பெண் கலைஞர் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் ஜானி மாஸ்டரின் மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், ஜானி முதல் முதலாக பாலியல் தொல்லை கொடுத்த போது, அப்பெண்ணுக்கு 18வயது கீழ் இருந்துள்ளதால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர். 

இதனிடையே நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் அவர் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் தற்காலிக தடை விதித்தது. மேலும் அவர் உறுப்பினராக இருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து ஜானி மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் சைதராபாத் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்