Skip to main content

"90ஸ் கிட்ஸ் தப்பு பண்ணிட்டாங்க, 2000 கிட்ஸ் சரி பண்றோம்" - செல்வராகவனிடம் மன்னிப்பு கேட்ட ரசிகர்கள்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

100thil oruvan


எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், வெளியான சமயத்திலேயே செம ஹிட் அடித்தது. ஆனால், செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படமோ வெளியான சமயத்தில் ‘என்னடா இது’ என்று பார்த்தவர்கள் குழப்பமாகக் கேட்க, பின்னர் காலம் கடந்து தற்போது ஹவுஸ்ஃபுல்லாக பல ஜி.கே மீடியா தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

கடந்த வாரம் செல்வராகவனின் பிறந்தநாளன்று அவருக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக செல்வாவின் மாஸ்டர் பீஸ் படங்களான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. அப்போதிருந்து சென்னை போரூர் ஜி.கே.சினிமாஸ் தியேட்டரில் இந்த வாரம் வரை 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள் அவ்வப்போது சில காட்சிகள் திரையிடப்படுகின்றன. அந்தப் படங்கள் வெளியானபோதுகூட தியேட்டர்களில் டிக்கெட் வாங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், தற்போது இவ்விரண்டு படங்களுக்கும் செம கிராக்கியாக உள்ளது. இன்று ஷோ இருக்கிறது என்று சொன்னால் ஆன்லைனில் புக்கிங் சற்று நேரத்திலேயே முடிந்துவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
 

'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானபோது அந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வந்தது எதிர்ப்பும் விமர்சனங்களும்தான். இந்தப் படம் 'சோழர்களை இழிவாகக் காட்டுகிறது', படம் இரத்தம், கத்திக்குத்து என்று இருக்கிறது, படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை என்றும் விமர்சனங்கள் வந்தன. படத்தில் ரீமாசென் ஆண்ட்ரியா இருவரும் பேசிய சில வசனங்கள், கார்த்திக்கு இரு புறமும் நாயகிகள் இருவரும் கட்டிப்பிடித்துக்கிடப்பது என இன்னொரு ஆங்கிலிலும் விமர்சித்தார்கள் அப்போதைய சினிமா பார்வையாளர்கள். ஆனால், காலங்கள் மாற மாற, பழைய விமர்சனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்படுகிறது. 
 

செல்வராகவனின் இந்த பிறந்தநாளுக்குப் பின் படங்களை பார்த்த ரசிகர்கள் இன்றும் தியேட்டர்களில் கரகோஷங்களை எழுப்பி, காது கிழிய விசில் அடித்து அவ்வளவு மகிழ்ச்சியாகப் படம் பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் 'இந்தப் படம் வந்த சமயத்தில் பார்க்கமுடியாமல் போனது', 'அதை கொண்டாடும் அளவிற்கு எங்களுடைய மனநிலை இல்லை', 'செல்வா எங்களை மன்னிச்சிடுங்க', 'நீங்க ரொம்ப ஜீனியஸ்', 'அப்போ புரியவில்லை, இப்போ புரியுது' என்றெல்லாம் சொல்கிறார்கள். '90ஸ் கிட்ஸ் இத ஓடவைக்காம தப்பு பண்ணிட்டாங்க, 2000 கிட்ஸ் நாங்க ஓட வைக்கிறோம்' என்றும் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பதிவிடுகிறார்கள்.
 

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசை எந்தக் காட்சியிலும் நம்மை உணர்ப்பூர்வமாகக் கடத்தும் என்பதில் சந்தேகமே இல்லை, அப்படி முழு மூச்சுடன் வேலை செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் ஒரு பேட்டியில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை தற்போது கொண்டாடுகிறார்களே என்ற கேள்விக்கு, “படம் வந்தபோதே கொண்டாடியிருந்தால், தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 வந்திருக்கும். இனிமேல் அந்தப் படத்தைக் கொண்டாடி எதுவும் ஆகப்போவதில்லை. படம் வந்தபோது எனக்கோ செல்வாவுக்கோ ராம்ஜிக்கோ எந்தப் பாராட்டும் கிடைக்கவில்லை. ஒரு விருதும் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்