
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, “எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும் இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது. எங்களின் கதையைக் கேட்டு, லைகா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு ஃபோன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினோம். அங்கு இருந்தபோது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம்” என்றார்.
மேலும், “இந்தப் படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும். ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள். ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பை கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.