Skip to main content

தந்தை தந்த அறிமுகம்... ’தளபதி’ என்னும் புது முகம்! விஜய்யின் பயணம் #1   

Published on 06/11/2020 | Edited on 06/11/2020


 

thalaivaa vijay

 

மீண்டும் ஒரு முறை சர்ச்சையாகியிருக்கிறது விஜய் என்ற பெயர். கட்சி தொடங்க விண்ணப்பம் என்று செய்தி, அதை உறுதி செய்த தந்தை, தனக்கு சம்மந்தமில்லை என்று விஜய் அறிக்கை... என இதுவரை இல்லாத மனநிலையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சில ஆண்டுகளாகவே அவர்களது போஸ்டர்களிலும் பேனர்களிலும் சினிமாவைத் தாண்டிய அரசியல் வாசகங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 'நாளைய தீர்ப்பி'ல் அறிமுகமாகி தனது தந்தையால் 'இளைய தளபதி' ஆக்கப்பட்டு தற்பொழுது ரசிகர்களால் 'தளபதி'யாக உயர்ந்து நிற்கிறார் விஜய்.

 

இவரது தந்தை புகழ் பெற்ற, பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர்தான், அதனால் இவர் சினிமாவுக்குள் வந்தது மிக எளிதாகவும் இயல்பாகவும் நடந்துதான். ஆனால், அதன் பின்பு இவர் பெற்ற வெற்றிகளோ, இன்று அடைந்திருக்கும் புகழோ இவருக்கு எளிதாகவோ இயல்பாகவோ கிடைத்திடவில்லை. இவரது சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்திருக்கிறார், பின்பு ஆற்றலைத் திரட்டி எழுந்திருக்கிறார்.

 

இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பெரும்பாலும் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்த விஜய், கதாநாயகனாக அறிமுகமானது 1992இல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில்தான். அறிமுகமானபோது இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன, கேலி பேசப்பட்டன. சளைக்கவில்லை எஸ்.ஏ.சி. தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை தனது மகனை வைத்து இயக்கினார். இவற்றில் செந்தூரப்பாண்டி மட்டுமே ஓரளவு வெற்றியையும் பெற்று அனைவரும் பார்க்கும்படியும் இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் கவர்ச்சி, அதீத மசாலாத்தனம் என விமர்சிக்கப்பட்ட படங்கள். அதிலும் 'ரசிகன்' திரைப்படம் கவர்ச்சி, ஆபாசம், மசாலா  கலவையில் உச்சமாக இருந்தது.

 

இதனால், அத்தனை படங்கள் நடித்தாலும் விஜய் என்னும் நடிகர் குடும்பங்களால், பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே அதுவரை இருந்தார். இத்தனை விமர்சனங்களிலிருந்தும் விஜயை மீட்கும் வண்ணம் 1996ஆம் வருடம் வெளியானது 'பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய அந்தப் படம்தான் அதன் பின்னர் பல ஆண்டுகள் விஜயைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்த வெற்றித் திரைப்படம். திருமண வீடுகளெங்கும் 'ஆனந்தம் ஆனந்தம்', காதலர்கள் மனங்களெங்கும் 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என முழுமையாக மக்களிடம் விஜயைக் கொண்டு சேர்த்தது அந்தத் திரைப்படம். இதன் தொடர்ச்சியாக அமைந்தவைதான் பின்னர் வந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற இந்த வகை வெற்றிப் படங்கள்.

 

 

naalaiya theerpu

 

 

அதன் பிறகு சில வெற்றிப்படங்கள், ஓரிரு தோல்விப் படங்கள் என சென்றது விஜயின் சினிமா பயணம். ஆனாலும் அப்பொழுது விஜயைப் பற்றி இருந்த பேச்சு, அவர் B, C சென்டர்களுக்கான நாயகன் என்பதே. இப்பொழுது தமிழ் சினிமா சந்தையில் இந்த A, B, C சென்டர் பிரிவுகள் குறைந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் அந்த வரையறை பலமாக இருந்தது. விஜய் ஸ்டைலான பாத்திரங்களுக்கு ஏற்றவரல்ல என்ற பார்வையே இருந்தது. அவரும் அதுபோல தனது உடைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, செலுத்தினாலும் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கும். பிரஷாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது, திருடா திருடா, ஜீன்ஸ் என மணிரத்னம், ஷங்கர் நாயகனாக அவரும் இன்னொரு புறம் அழகான நாயகனாக அஜித்தும் பேசப்பட, விஜய்க்கு இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த 'குஷி' அந்த பிம்பத்தை மாற்றியது. 'வாலி' என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற, வழக்கத்துக்கு மாறான படத்தை எடுத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, ஒரு வெகு வழக்கமான கதை, அதையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு கொண்டு சென்ற 'குஷி' வாலியை மிஞ்சும் வெற்றியைப் பெற்றது. விஜயின் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கும் உடைகளுக்கும் துவக்கமாக அது அமைந்தது.

 

நல்ல வெற்றிகள், புகழ், மெல்ல பெருகிக்கொண்டிருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, என தொழில் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அந்த சமயம், விஜயின் சொந்த வாழ்க்கை குறித்து சில செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவர் காதலில் விழுந்ததாகவும் அதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அதனால் தற்கொலை முயற்சி அளவுக்கு சென்றதாகவும் அப்போது சில பத்திரிகைகளில் 'கிசுகிசு' வகை செய்திகள் வந்தன. ஆனால், எதுவும் பெரிதாக வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அதற்கு விஜய் தரப்பில் யாரும் பதிலும் சொல்லவில்லை, பதில் சொன்னது 1999ஆம் ஆண்டு நடந்த விஜய்-சங்கீதா திருமணம். லண்டனில் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழரும் தன் ரசிகையுமான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் விஜய். இன்று வரை அவர்களது அன்பில் எந்தக் குறையுமின்றி செல்கிறது அவர்கள் உறவு.



 

vijay with sangeetha


 

காதல் படங்கள், குடும்பப் படங்கள், காமெடி படங்கள் என பல வெற்றிகளைக் கொடுத்த விஜய்க்கு அப்பொழுது வரை ஆக்ஷன் என்ற ஒன்று அமையவேயில்லை. தனது தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷன் படங்களாக ஆக்க முயற்சிக்கப்பட்டவைதான். ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விஜயின் பட போஸ்டர்களோ பாடல்களோ வெளிவரும்போதே அவை ஆக்ஷன் படம் போல  இருந்தால், 'படம் அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் பேசக்கூடிய அளவுக்கு இருந்தது விஜய் கிராஃப். ஆரம்ப கால அப்பாவின் படங்களும் அதற்குப் பின் அவ்வப்போது முயற்சித்த ஆக்ஷன் படங்களான நெஞ்சினிலே, பகவதி, தமிழன், புதியகீதை போன்ற படங்களும் தோல்வியை சந்தித்ததால், 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்டது. இன்னொரு புறம் அவரது போட்டியாளராக இருந்த அஜித் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஆக்ஷனில் கலக்கிக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில் தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தன ஒரு புதிய விஜய் படத்தின் போஸ்டர்கள். அது எந்தப் படம்? வெற்றி பெற்றதா? கீழே உள்ள கட்டுரை லிங்க்கை கிளிக் செய்து தொடர்ந்து வாசியுங்கள்...     

எஸ்.ஏ.சி, விஜய்க்கு செய்தது என்ன? விஜய்யின் பயணம் #2

 

 

 

சார்ந்த செய்திகள்