Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #16

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

marana muhurtham part 16

 

அத்தியாயம் - 16

 

கவியின் கோலத்தைப் பார்த்ததும், ஷாலுவுக்கு ‘சந்திரமுகி’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. அதில் ரஜினி "முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற கங்காவைப் பாருன்னு" சொல்வாரே, அதுபோல கவி முழுதாக தியாவாக மாறிட்டாளா? எனத் திகைத்தாள். உள்ளுக்குள் அதிர்ச்சியின் டெசிபல் ஏறிக்கொண்டே இருந்தது.

"ஏய் கவி.. ஏய்... என்னப் பாரு கவி.." என்று அவள் தோளைத் தொட்டு உலுக்கினாள் ஷாலு.

 

ஷாலு கத்தியதைப் பார்த்து அத்தையே என்னவோ ஏதோவென்று அந்த அறைக்கு வந்துவிட்டார். "கவி... என்னம்மா ஆச்சு? பேயறைஞ்ச மாதிரி இருக்கியே.." என்று கேட்டு, ஷாலுவின் வயிற்றில் புளிக்கரைச்சலை ஊற்றினார்..

 

ஷாலுவும், அத்தையும் கத்தியதில் சுயநினைவுக்கு வந்த கவி 

"சாரி அத்தை. இன்னைக்கு முழுக்க ஒரே அலைச்சல். அதோட கடுமையான வெய்யில். படிக்க வேண்டிய போர்ஷன்ஸ் வேற வால்யூம் வால்யூமா மிரட்டுது. அதான் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்” - அவருக்குத் தன் மேல் வீணான சந்தேகமோ குழப்பமோ வரக்கூடாது என்பதற்காக ஏதேதோ சொல்லிச் சமாளித்தாள் கவி.

 

ஆனால், கவிக்குக் குழப்பமாக இருந்தது. தனக்குள் ஏதோ நடக்கிறது என்று புரிகிறது.. ஆனால் என்ன நடக்கிறது என்பதை அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

 

சில நிமிடங்கள் தன்னிலை மறந்த நிலையில்.. தான் ஏதேதோ பேசியதாக உணர்ந்தாள். ஒரே குழப்பமாக இருந்தது. இருந்தாலும் இதுபற்றி... ஷாலுவிடம் கூட எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தவள்.... தான் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள். 

 

அத்தை இருவருக்கும் சுடச்சுட நெய் தோசையும் தேங்காய்ச் சட்னியும் செய்து தந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழிகள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதால், சிறிது நேரம் கவலைகளை மறந்து சாக்லேட்  கேர்ள்ஸ் மாதிரி மகிழ்ச்சியில் மிதந்தனர். ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு, அத்தைக்கும் ஊட்டிவிட்டனர். அத்தையும் இளசுகளுக்கு ஈடு கொடுத்து அரட்டையில் சங்கமித்தார். 

 

மனம் எவ்வளவுதான் பயத்திலும், கவலையிலும் இறுகியிருந்தாலும், அதைக் கொஞ்சம் அன்பின் மழை நனைக்குமானால்.. இருந்த இறுக்கம் எல்லாம் தானாய்க் கரைந்து ஓடிவிடும்; மனம் இலவம் பஞ்சாய் பறக்கும். சாப்பிட்டு முடிச்சதும் ஷாலு தன் வீட்டிற்குக் கிளம்பினாள். அத்தையிடம் தான் இங்கு வந்து போனதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் கிளம்பினாள்.

 

கவிக்கு ஏனோ அம்மா, அப்பாவின் நினைவு மனதினுள் ரங்கராட்டினமாய்ச் சுற்றியது. அம்மாவிற்கு ஃபோன் போட்டாள். எதிர் முனையில் குரல் பலகீனமாய், “ஹலோ”  என்றது. 

“அம்மா, என்னாச்சும்மா? உடம்பு சரியில்லையா?" என்று பதறினாள் கவி. 

"ஒன்னுமில்லைமா... லேசான தலைவலிதான். சரியாயிடும்" என்று சமாதானப்படுத்தும் தொனியில் சொன்னாள் திலகா.

"கிளாஸ்... எப்படி போகுதும்மா? என்ன நீ முதல்ல, தினமும்  லைவ்ல வருவ. இப்ப என்னாச்சு உனக்கு? சிக்னல் பிராப்பளமா?” என்று கிண்டலாகப் பேசினாள் திலகா. 

"ஆமாம் மம்மி. நீங்க தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்” என்று பதில் கவுண்ட்டர் அடித்தாள் கவி. அம்மாவிடம் பேசியதும், ’அம்மாவைப் பார்க்கக் கூட வேண்டாம்... பேசினாலே போதும்... புது எனர்ஜிதான்..’ என்று, ஹார்லிக்ஸ் விளம்பரத்தை அவள் மனம் உல்டா பண்ணியது. அந்த நினைவுகளுடன்  தூங்கப் போனாள் கவி.

 

எங்கே ஓடுகிறார்கள், எதற்கு ஓடுகிறார்கள் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒருத்தியாய், அங்கே என்ன கிடைக்கும் என்று தெரியாமலே, ராகவ் மருத்துவமனை நோக்கி கவியும் ஓட ஆரம்பித்துவிட்டாள். ஓட்டம் என்றால் வாடகைக் காரில்தான். 

 

ரிசப்ஷனில் டாக்டர் லேகாஶ்ரீ பற்றி விசாரித்துக்கொண்டு, அவள் இருக்கும் செகண்ட் ஃப்ளோருக்குச் சென்றாள். அந்த இடத்தைக் கவலைகள் அற்ற சொர்க்கம் என்பதா? தான் யார் என்றே அறிய முடியாத நரகம் என்பதா? மன பாதிப்புக்கு ஆளானவர்கள் அங்கு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான நடவடிக்கை  இருப்பதைக் கவனித்தாள்  கவி. 

 

அங்கங்கே சுவர்கள், சின்னசின்ன ஃபிளக்ஸ் பேனர் மாதிரி , மனம், மன நோய் குறித்த விபரங்களை, யார் கவனிக்கிறார்களோ இல்லையோ சொல்லிக்கொண்டிருந்தன.  ‘தெளிவற்ற சிந்தனை, கவலை அல்லது எரிச்சல், அதிக சந்தோஷம் / அதிக கவலை,  தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம், தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது, உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது...’ என்றெல்லாம் பயமுறுத்தும் விளம்பரமும் அதில் இருந்தது. அதைப் படிக்கப் படிக்க, தனக்கே மனப்பிரச்சனை இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. 

 

இவள் வந்ததைத் தெரிவிக்க லேகாவிற்கு ஃபோன் போட்டாள். "ஹலோ” என்ற எதிர்முனை, ”10 நிமிடம் வெயிட் பண்ணுங்க, பேஷன்டை அனுப்பிட்டுக் கூப்டறேன்" என்றது. இனிக்கும் குரலில்..

 

லேகாவின் அறைக்கு அழைக்கப்பட்டாள் கவி.

 

லேகாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியாகி, "குட்மார்னிங் ” என்றவள், ”இப்ப உடம்பு எப்படி இருக்குங்க?" என்று அன்புடன் விசாரித்தாள்.

"ஹாய்... மறக்காம வந்துட்டீங்களே கவி. நான் நார்மலாயிட்டேன். காயமெல்லாம் ஆறிடுச்சு. அன்னைக்குப் பயங்கர அனுபவம்... உங்களைப் பத்தி நான் முழுசா விசாரிக்கவே இல்லை. நீங்க என்ன பண்றீங்க கவி?" என்ற லேகாவிடம்..

“நீட்டுக்கு ரெடியாயிக்கிட்டு இருக்கேன்" என்றாள் கவி.

"ஓ....ஏதாவது ஹெல்ப்  வேணும்னா  தயங்காமக் கேளுங்க" என்றாள் லேகா மகிழ்வாக.

"ஓ... நானும் ஒரு ஹெல்புக்காகத்தான் வந்தேன்”

“சொல்லுங்க.முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்”

“எனக்கு ஒரு பேஷன்டைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆசை. பேர் தியா, +1 படிச்சிக்கிட்டிருந்த பொண்ணு. போன மாதம் இங்க ட்ரீட்மெண்ட்க்கு வந்தா... என் குளோஸ் ஃபிரண்ட்... இப்ப அவ உயிருடன் இல்லை.”

”ஓ  ஐயாம் சாரி”

”அவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுகலாம்னுதான் வந்தேன்"என்று உண்மையைச் சொன்னாள் கவி.

"கவி, அந்த தியா எங்க படிச்சா..?"

"வேளச்சேரி, கே.என்.எம். ஹையர் செகண்டரி ஸ்கூல்ல” இதைக் கேட்டதும் லேகாவின் முகம் மாறியது. 

"அந்தப் பள்ளியிலா?” 

"இல்ல.. அந்த ஸ்கூல பத்தி யார் என்ன கேட்டாலும் சொல்லக் கூடாதுன்னு என் சீனியர் டாக்டர் சொல்லியிருக்கார்" என்று தயங்கினாள் லேகா.

”உங்க சீனியரைப் பார்த்துக் கேட்கலாமா? ப்ளீஸ் “ என்று கவி சொல்ல..

 

லேகா ரொம்பவே தயங்கினாள்.

 

லேகாவின் முகத்திலிருந்த குழந்தைத் தனமும், கண்களின் தெளிவும், அவளை நம்பலாம் என்று வழிமொழிய... சட்டென எழுந்து லேகாவை நோக்கிக் கைகூப்பிய கவி...

“மேடம், உங்களை என் சகோதரியா நினைச்சிப் பேசறேன். உங்கள மாதிரி, என்னை மாதிரி.. தியா மாதிரி.. இருக்கும் அப்பாவிப் பெண்களை, குறிப்பா அங்க இருக்கும் மாணவிகளைக் குறிவச்சி... அந்த ஸ்கூல்ல ஒரு கும்பல் என்னவோ செய்யுது. அந்தக் கும்பலிடம் மாட்டிய தியாதான், நடந்ததை வெளியில் சொல்லாம, சொல்ல முடியாம சூசைட் பண்ணி செத்துருக்கா... இதை இப்படியே நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கக் கூடாது. நீங்க களத்தில் இறங்கி துப்பறியணும்.. நீதி கேட்கனும்ன்னு நான் சொல்ல வரலை. அந்த பின்னணியக் கண்டுபிடிக்க நினைக்கும் எனக்கு, உங்களால முடிஞ்ச ஹெல்ப்ப செய்யுங்கன்னுதான் கேட்கறேன். ப்ளீஸ் கோ ஆப்பரேட் பண்ணுங்க...” என்றாள் கண்ணீருடன். லேகா, இதைக்கேட்டுக் குழம்பி நிற்க...

"தியா நிலைமை வேற எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாதுங்கற ஆதங்கத்துலதான் நான் இப்ப போராடுகிறேன். புரிஞ்சுகோங்க” என்று கெஞ்சினாள்.

 

லேகா யோசித்தாள்.

 

அப்போது திடீரென்று கவி, லேகாவை நெருங்கி அவளது கைகளைப் பிடித்தாள். "டாக்டர், என்னத் தெரியலையா? நல்லா பாருங்க... அன்னிக்கு நான் இங்க வந்தப்ப..  நீங்களும்தானே, இங்கே இருந்தீங்க... நான்  எனக்கு நடந்ததை எல்லாம் சொல்லி அப்ப அழுதேனே... மறந்திட்டீங்களா? அப்ப டாக்டர், ஏம்மா மனம் குழம்பிப் போய் ஏதேதோ பேசற... இதுமாதிரி எல்லாம் பேசாதன்னு என் வாயை அடைச்சாரே... அப்ப பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க? என் நீட் கனவெல்லாம் போயிடுச்சின்னு எப்படித் துடிச்சேன்... எனக்கு நியாயம் கிடைக்காதா?... ஒரு பெண்ணான நீங்களே  இரக்கம் காட்டமாட்டீங்களா? கவி எனக்காக எவ்வளவு கஷ்டப்படுறா? அவளுக்கு உதவ மாட்டீங்களா?” என்று கவி கேட்க...... 

 

லேகாவிற்கு தூக்கிவாரிப் போட்டது. சட்டென வியர்த்துப் போய் எழுந்தாள். அன்று கேட்ட அதே குரல்.

 

பேசியது தியாவா..? இல்லை கவியா..? வாயடைத்து நின்றாள் லேகா. கவியின் கண்களில் உக்கிரம்...

 

( திக் திக் தொடரும் )
 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #15