Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை - 5: மின்னஞ்சலைத் தொட்டால் மோசடி வலையில் சிக்குவீர்கள்!

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

digital cheating part 5

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் சிறியதாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் ஒருவர். அவரது முகவரிக்கு டிஜிட்டல் இந்தியா கம்யூனிகேஷன் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெல்லி என்கிற மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தோடு ஒரு கூப்பன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கூப்பனை சுரண்டி பாருங்கள் உங்களுக்கான பரிசு அதன் உள்ளே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரும் ஆசையாக கூப்பனை சுரண்டியுள்ளார். 2,70,000 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளீர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பெற நீங்கள் எங்களது கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் அந்த நம்பருக்கு கால் செய்துள்ளார். தமிழ் மொழியில் பேசியவர் அந்த பணம் உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் உடனே மத்திய – மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி வரி ரூ.6,300 ரூபாயை உடனே செலுத்துங்கள் எனச் சொல்லியுள்ளார். 

 

புதுக்கோட்டைக்காரர் சாமர்த்தியமாக, நீங்க வரியை பிடிச்சிக்கிட்டு மீதி பணத்தை எனக்கு அனுப்புங்க என்றுள்ளார். அப்படியெல்லாம் செய்ய முடியாது பணம் செலுத்துனிங்கன்னா, நாங்க உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்துடுவோம் என்றுள்ளார். அந்த கடிதத்தில் டிஜிட்டல் இந்தியா லோகோ, ரிசர்வ் வங்கியின் லோகா, இந்தியாவின் சிங்கம் சின்னம் போன்றவை பயன்படுத்தியிருந்தனர். இதனால் கடிதம் உண்மைதான் என நம்பியவர், அவுங்க சொல்றதும் உண்மைதான் என நம்பினார். 2.7 லட்ச ரூபாயாச்சே என மனிதனின் ஆசை சும்மாயிருக்குமா. வீட்டில் வைத்திருந்த பணத்தை கொண்டு போய் கஸ்டமர் கேர் சொன்ன வங்கி கணக்கில் பணத்தை கட்டியவர், பணம் வந்துவிடும் எனக் காத்திருக்கத் தொடங்கினார். 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்டஸ்ட்ரி வைத்து நடத்தும் குட்டி தொழிலதிபர் ஒருவரது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அந்த மின்னஞ்சலில் ரஷ்யாவில் வாழ்ந்த பெரும் தொழிலதிபர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அவர் ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அதில் எனது சொத்துக்களை இந்தியாவில் உள்ள ஒருவருக்குத் தான் தரவேண்டும்; அவரை மின்னஞ்சல் முகவரி மூலமாக தேர்வு செய்யுங்கள்; அவர் நல்லவராக இருக்கவேண்டும்; மக்களுக்கு சேவை செய்பவராக இருக்க வேண்டும்; அதை உறுதி செய்துகொண்டு அவருக்கு என் மொத்த சொத்தையும் தந்து விடுங்கள் எனச் சொல்லியுள்ளார். அவர் கடந்த வாரம் இறந்துவிட்டார். அரசு நிர்வகிக்கும் கமிட்டிக்கு அவரது உயில் வந்துள்ளது. அதன்படி நாங்கள் இந்தியர்களின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி குலுக்கல் முறையில் தேடியபோது இந்த மின்னஞ்சல் முகவரி வந்துள்ளது. அவரின் 70 மில்லியன் சொத்துக்களை உங்களுக்கு வழங்க தயாராகவுள்ளோம்.

 

உங்களைப் பற்றிய தகவலை அளியுங்கள் எனச் சொல்லி ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது. இறந்தவரின் டெத் சர்டிபிகெட் அதோடு இணைக்கப்பட்டு இருந்தது. ஆஹா நாம லக்கி மேன் என நினைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை அந்த மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக அனுப்பியுள்ளார். அதில் எனக்கு நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானால் ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறேன் என குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்துள்ளார். சில தினங்கள் பொருத்து மீண்டும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள். அதில், நீங்கள் குறிப்பிட்டு அனுப்பியிருந்த தகவல்களை எங்கள் கமிட்டி ஆய்வு செய்தது. உங்களிடமே அந்த தொகையை வழங்க முடிவு செய்துள்ளோம் என மின்னஞ்சல் அனுப்ப அதைப் பார்த்து சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

 

7 மில்லியன் பவுன்ட். நம்மவூர் மதிப்புக்கு 70 லட்சம் பவுன்ட். ஒரு பவுன்ட் நம்மவூர் மதிப்புக்கு 120 ரூபாய். மொத்தம் நம்மவூர் கணக்குக்கு எவ்ளோ வரும் என கால்குலேட்டர் எடுத்து கணக்கு போடத் தொடங்கினார். கால்குலேட்டர் தந்த கணக்கைப் பார்த்து, அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அடுத்து எப்போது மின்னஞ்சல் வரும் எனப் பார்த்தார். வரவில்லை. இவரே மின்னஞ்சல் அனுப்பினார். எங்கள் நாட்டு நிதித் துறையில் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. அவ்வளவு பணம் அனுப்பினால் இந்திய நிதித்துறை எப்படி ஏற்றுக்கொள்ளும் எனக் கேட்கிறார்கள். அவர்களை சரிக்கட்ட வேண்டியுள்ளது என பதில் தந்துள்ளார்கள். 

 

கோவைக்காரர் ‘அவங்களை எப்படியாவது சரிக் கட்டுங்கள், நான் அதற்கு என்ன செலவாகுமோ அதைத் தருகிறேன்’ எனச் சொல்லி பதில் மின்னஞ்சல் செய்தார். அவர்கள் 10 ஆயிரம் பவுன்ட் பணம் அனுப்பவும் எனச் சொல்ல இவர் இந்திய மதிப்பில் கணக்குப் போட அது 12 லட்ச ரூபாயைக் காட்டியது. கொஞ்சம் அதிர்ச்சியானாலும் நமக்குதான் 70 லட்சம் பவுன்ட் வரப்போகுதே என அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி எடுத்துச்சென்று பணத்தை கட்டியுள்ளார். பணத்தை கட்டியபின் மின்னஞ்சல் வரவில்லை. இவர் மின்னஞ்சல் அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ். அதன்பின்பே அவருக்கு புரிந்தது பணம் அனுப்புகிறேன் எனச் சொன்னவர்கள், இவரது வங்கி கணக்கு எண்ணைக்கூட வாங்கவில்லை என்பது. அவ்வளவுதான் பணம் போனது போனதுதான். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் வெளியே சொல்லவும் முடியவில்லை. குடும்பத்தாரிடமும் நெருங்கிய நண்பரிடமும் சொல்லி கதறி கதறி அழுதுள்ளார். 

 

புதுச்சேரி மாநிலம் பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையம் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். அவர் பி.இ படித்துள்ளார். தான் படித்த படிப்புக்கு வெளிநாடுகளில் ஏதாவது வேலை கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டு இருந்துள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரிக்கு பிரெஞ்சு துணை தூதரகம் என்கிற பெயரிலிருந்து ஒரு மின்னஞ்சல் அந்த இளம்பெண்ணுக்கு வந்தது. அதில் உங்களுக்கு பிரான்ஸில் வேலை உள்ளது, நீங்கள் புதுச்சேரியில் பிறந்தவர், பிரெஞ்ச் குடியுரிமை பெறத் தகுதியானவர் என்பதால் உங்களுக்கு பிரான்சில் வேலை உள்ளது. 

 

இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் எனச் சொல்லி இரண்டு தவணையாக 5 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதன்பின் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன்பின் பாண்டிச்சேரி சைபர் செல் பிரிவில் புகார் தந்தார். புகாரை விசாரித்த போலீசார் இந்த மின்னஞ்சல் டூப்ளிக்கெட் எனச் சொல்ல அந்த பெண் அதிர்ச்சியாகியுள்ளார். இப்படி தினமும் நமது ஒவ்வொவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயிலாவது வரும். அதில் வாரிசு இல்லாத கோடீஸ்வரர் இறந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம் பல கோடி கேட்பாரில்லாமல் உள்ளது. 

 

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் லாட்டரியில் 1 கோடி பணம் விழுந்துள்ளது, உங்களுக்கு உலகின் பிரபலமான பிபிசி நிறுவனத்தில் வேலை உள்ளது. இதற்கு நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கட்ட வேண்டும்; வரி கட்ட வேண்டும்; அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு மின்னஞ்சலில் தகவல் இருக்கும். இதனை நம்புவதற்காக சில ஆவணங்களை அதில் இணைத்திருப்பார்கள். அதனைப் பார்த்துவிட்டு ரிப்ளே செய்தால் அன்று முதல் நாம் அவர்களின் வலையில் சிக்கிவிட்டோம் என அர்த்தம். 

 

அதன்பின் நாம் அவர்களுக்கு அடிமை! என்ன அடிமையா? 

 

தொடரும்...