Skip to main content

தொடர் கை செயின் பறிப்பு; சட்டக் கல்லூரி மாணவன் சிக்கியது எப்படி - ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 13

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 rtrd-ac-rajaram-thadayam-13

 

கை செயின் மட்டும் பறிபோன வழக்கு ஒன்று பற்றிய விவரங்களை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னையில் ஒரே மாதத்தில் கை செயின்கள் பறித்துக் கொண்டு போகிறார்கள் என்று தொடர்ச்சியாக புகார்கள் குவிந்து கொண்டிருந்தது. கழுத்துச் செயினை பவாரியா கும்பல் போன்று சிலர் சென்னையில் கொள்ளை அடித்தது அனைவரும் அறிவர். ஆனால் இது கை செயினை மட்டும் பறித்துக் கொண்டு போகிற கும்பலாக இருந்தது. இப்போது இருப்பது போல அவ்வளவாக சிசிடிவி எல்லாம் அப்போது எல்லாம் இல்லை. ஆனால் கை செயின் பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிற இடங்களுக்குச் சென்று விசாரித்தால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆமாம் இப்படி ஒரு ஒரு சம்பவம் நடந்தது என்று சொல்கிறார்கள்.

 

கழுத்து செயினாவது சற்று நீளமானதாக இருக்கும், இழுத்துச் சென்றிருப்பார்கள் என்பதை யூகிக்க முடிந்தது. கையில் ஒட்டியபடி இருக்கும் கை செயினை எப்படி பறித்திருப்பார்கள் என்று தீவிரமாக விசாரித்தோம். 16 இடங்களில் இதுபோன்று சென்னையில் கொள்ளை போயிருக்கிறது. எனவே ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் காவல்துறைக்கு அனைத்து கொள்ளையிலுமே ஒரு ஒற்றுமை தெரிய வந்தது.

 

கை செயினை பறிகொடுத்த அனைவருமே டிவிஎஸ் 50, பஜாஜ் எம் 80, போன்ற குறைவேக பைக்குகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் திருடனோ மிக வேகமாக செல்லும் யமாஹா பைக் வைத்திருந்திருக்கிறான். வலது கையில் இருக்கும் கை செயின் ஆக்சிலேட்டரை திருகும் போது லேசாகத் தொங்கும்; அந்த இடைவெளியில் திருடன் இடது கையைப் பயன்படுத்தி விரல்களை உள் நுழைத்து பைக்கை வேகமாக ஆக்சிலேட்டரை முறுக்கியதும் கையோடு அறுந்து வந்திருக்கிறது. இப்படித்தான் 16 நபர்களிடம் திருடியிருக்கிறான்.

 

கை செயினை பறிகொடுத்தவர்கள் சொன்ன அடையாளத்தை வைத்து அவர்கள் சொன்ன நம்பர் பிளேட்டை வைத்து அவனது வீடு மகாபலிபுரம் என்று கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தனர். திருடனின் மனைவி நான் வழக்கறிஞர், இவரும் சட்டக் கல்லூரி மாணவன் என்றெல்லாம் முரண்டு பிடித்து காவல்நிலையம் வர முடியாது என்று சண்டையிட்டிருக்கிறார்கள். சென்னை வரவழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்து நகைகளை மீட்டு பிறகு கொடுக்கப்பட்டது.