Skip to main content

அந்த குழந்தையோட அப்பா என் புருசனில்லை; அதிர வைத்த ஐடி பெண் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 14

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Detective Malathi's Investigation: 14

 

தான் சந்தித்த ஒரு வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

தன்னுடைய பெண்ணை அவள் கணவர் பயங்கரமாக டார்ச்சர் செய்வதால் விவாகரத்து வாங்கித் தர வேண்டும் என்று ஒரு பெண் நம்மிடம் வந்தார். முதலில் தம்பதியினர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். இருவரும் ஐடி ஊழியர்கள். அவர்கள் செய்தது காதல் திருமணம். நீண்ட காலத்துக்குப் பிறகு தன்னுடைய மகள் தன் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் அவளது பெற்றோர் கூறினர். அவளுக்கு ஆறு மாதக் குழந்தையும் இருந்தது. தன்னுடைய பெண் பணம் கொடுத்தால்தான் மாப்பிள்ளை விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வார் என்றார்கள். 

 

அவர்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்க நம்முடைய வழக்கறிஞர்கள் மூலம் ஏற்பாடு செய்தோம். பெண் தரப்பு பணம் தர ஒப்புக்கொண்டார்கள் என்பது தெரிந்தவுடன் நம் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஏதோ தவறு இருக்கிறது என்பது எனக்கும் புரிந்தது. ஆண் குழந்தையை மாப்பிள்ளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பெண் குழந்தையை அந்தப் பெண் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களாகவே முடிவு செய்தனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டவுடன் அந்தப் பெண் வெளிநாட்டில் வேலை செய்யக் கிளம்பினார். 

 

விவாகரத்துக்கு ஒப்புதல் அளித்து இருவரும் கையெழுத்திட்டனர். நம்மை விட அவர்கள் ஏன் வேகமாக இருக்கிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தான் வேறு ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்புவதால் தன்னுடைய குழந்தையின் இனிஷியலை மாற்ற முடியுமா என்று அந்தப் பெண் கேட்டார். உண்மையில் அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தேன். தன்னுடைய முதல் குழந்தை தன்னுடைய கணவருக்குப் பிறந்தது என்றும், இரண்டாவது குழந்தை தான் வெளிநாட்டில் இருந்தபோது இன்னொருவருக்குப் பிறந்தது என்றும் அவர் கூறினார். அதன் பிறகு தான் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

 

வெளிநாட்டில் இருப்பவர் இவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. அந்தப் பெண்ணின் திருமணம் நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண் வெளிநாடு சென்றார். அங்கு அவருக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஒருவர் பேசுவதை வைத்தே நமக்கான சந்தேகங்கள் எழுவது இயல்பு. வழக்குகள் முடிந்ததும் வழக்கு குறித்த விவரங்களை நாங்கள் அழித்துவிடுவோம்.