Skip to main content

அம்மா போட்ட ரூல்ஸ்; கெட்ட வார்த்தையால் திட்டிய மகன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :43

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
asha bhagyaraj parenting counselor advice 43

படிப்பில் அதிக டார்ச்சர் செய்ததால் அம்மாவிடம் பேச தயங்கும் பையனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

பையனிடம் அம்மா மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கிறார். சின்ன வயதிலிருந்து படிப்பு விஷயத்தில் அவனை டார்ச்சர் செய்திருக்கிறார். நன்றாக படிக்கும் அந்த பையன் ஒரு மார்க் கம்மியாக எடுத்தால் கூட மற்ற குழந்தைகளோடு கம்பேர் பண்ணி பேசியிருக்கிறார். இந்த நிலையில், பையன் தன்னுடன் ஒரு வருடமாக ஒழுங்காக பேச மாட்டிக்கிறான் என்று தான் அம்மா என்னிடம் வந்தார். அந்த அம்மாவிடம் நிறைய மாற்ற வேண்டியிருக்கிறது என்று கூறி அந்த அம்மாவிடம் தான் முதலில் பேசினேன்.

அடுத்த செக்‌ஷனில் தான் அந்த பையனிடம் பேச ஆரம்பித்தேன். ஒவ்வொரு வருடமும், படிப்பு விஷயத்தில் அம்மா டார்ச்சர் செய்திருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் கூட அந்த நேரத்திலும் படிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்கு அந்த பையன் 70 மார்க் எடுத்திருக்கிறான். இதனால், அந்த அம்மா அவனுக்கு ஒரு மாதம் சாப்பாடு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிருக்கிறார் எனச் சொன்னான்.  இதை பற்றி அம்மாவிடம் கேட்கும் போது, பையன் தன்னிடம் கெட்ட வார்த்தையால் பேசியிருக்கிறான் எனக் கூறினார். மார்க் விஷயத்தில் கம்பேர் பண்ணி சாப்பாடு கொடுக்க மாட்டேன் என அம்மா சொல்ல, கோபத்தில் அப்படி கெட்ட வார்த்தையில் பேசியிருக்கிறான். இப்படியே படிப்பு விஷயத்தில் கண்டிப்பு காட்ட, ஓரளவுக்கு விபரம் தெரிந்த பின்பு, அம்மாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளான். 

அம்மா தன்னை மாற்றுவதற்கு ரெடியாக இருக்கிறார் என அந்த பையனிடம் நான் எவ்வளவு சொன்னாலும், அவன் கேட்கவே தயாராக இல்லை. அந்த அம்மாவிடமும், இந்த இந்த விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் அவருடைய பார்வையை மட்டுமே சொல்கிறார். அம்மாவிடம் இருந்து விலகியதால் தாத்தா, பாட்டியுடன் இவன் நெருக்கமானதால், அவர்கள் தான் தன்னை பற்றி தவறாக தனது பையனிடம் சொல்லிவிட்டார்கள் என்ற எண்ணமும் அந்த அம்மாவுக்கு வந்திருக்கிறது. அதை மீறியும், அந்த அம்மாவும் நிறைய தவறு செய்திருக்கிறார் என்பதை அவர் உணரவே இல்லை. இரண்டு பேருமே அவர்களுடைய கண்ணோட்டத்தை தான் மாற்றி சொல்லிக் கொண்டு இருந்தார்கள். தன்னை மாற்றி கொள்ள தயாராக இருப்பதாக அம்மா சொன்னாலும், பையன் அதை நம்புவதற்கே தயாராக இல்லை. இந்த கவுன்சிலிங் இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. 

பேரண்டிங்கில் லாங்குவேஜ் என்பது மிக மிக முக்கியமானது. இந்த தலைமுறையில், சின்னதாக ஏதாவது சொன்னால் கூட அதை குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். தினமும், குழந்தைகளோடு கொஞ்ச நேரமாவது பேச வேண்டும்.