மாரியம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதான பிரசாதம் வழங்கிய நிகழ்வு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் தழைத்தோங்கி நிற்கிறது என்பதற்கு மத வேறுபாடின்றி அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைத்து மதத்தினரும் பங்கேற்பது இன்றுவரை சிறப்பாகவே உள்ளது. இதற்குச் சான்றாகப் புதுக்கோட்டை எப்போதும் முன்னோடி தான். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதே போல ஆவணி இறுதி நாட்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் போது தாகத்துடனும் பசியுடனும் செல்வதைப் பார்த்த கந்தர்வக்கோட்டை இஸ்லாமிய இளைஞர்கள் நீர் மோர்ப் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்ப்பதுடன் பல்வேறு சாதங்களையும் வழங்கி பசியாற்றி அனுப்பி வைக்கின்றனர். இஸ்லாமிய இளைஞர்களின் உணவு வழங்கும் பந்தலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து உணவு வாங்கி சாப்பிட்டு எப்பவும் நாம அண்ணன் தம்பிகள் தான் என்று மகிழ்வோடு கூறிச் சென்றனர்.