Skip to main content

இளம் மனைவியை கொடுமை செய்த சைக்கோ கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 24

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Advocate Santhakumari's Valakku En - 24

 

வரதட்சணை கொடுமை குறித்த ஒரு வழக்கை நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

சுபஸ்ரீ படித்த பெண். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம் என்று நினைத்து அவளுடைய பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை எதுவுமே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மாப்பிள்ளை வீட்டார் நல்லவர்களாக இருந்தனர். ஆனாலும் 101 பவுன் நகை உட்பட பல்வேறு சீர்வரிசைகளுடன் திருமணத்தை பெண் வீட்டார் நடத்தினர். நகைகளைப் பார்வையிட வேண்டும் என்று மாமனார் கேட்டதால் அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. நகைகள் மாமியாரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டன. 

 

மாப்பிள்ளை வீட்டில் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. திடீரென்று ஒருநாள் அவன் இந்தப் பெண்ணோடு வாழ விருப்பமில்லை என்று கூறி வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் பெங்களூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர். அவன் அவளை ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவளை வேலைக்குப் போகக்கூடாது என்று சொன்னதால் வேலைக்கும் அவள் போகவில்லை. இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று மாமனார், மாமியார் அடுத்த பிரச்சனையைக் கிளப்பினர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் பிரச்சனை அவனிடம் தான் இருக்கிறது என்பது தெரிந்தது.

 

அனைத்தையும் அவள் சகித்துக்கொண்டு வாழ்ந்தாள். அதன் பிறகு அவனுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டது. அவளுடைய தாயோ, தந்தையோ வீட்டுக்கு வந்தால் அவர்களை அவன் மதிப்பதில்லை. அவர்கள் இனி வரக்கூடாது என்று கூறினான். அவளை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்று நினைத்து தினமும் அவன் கலாட்டா செய்தான். அவள் மீது அவன் வன்முறையிலும் ஈடுபட்டான். ஒருமுறை அவளைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அவன் வெளியே கிளம்பினான். பக்கத்து வீட்டார் பார்த்து அவளுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

பெற்றோர் வந்து சமாதானம் பேசினாலும் அவன் திருந்துவதாக இல்லை. சேர்ந்து வாழ வேண்டும் என்று நாங்கள் மனு போட்டோம். விவாகரத்து வேண்டும் என்று அவன் மனு போட்டான். விவாகரத்து கொடுத்தால் தான் நகைகளை திரும்பக் கொடுக்க முடியும் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர். இந்த வழக்கு கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒரு யுத்தம் போல் நடந்தது. இறுதியாக மாப்பிள்ளை தரப்பிலிருந்து 40 லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தனர். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அந்த பெண் இப்போது நிம்மதியாக வாழ்கிறாள்.

 

 

Next Story

மாதவிடாய் நாளில் வீட்டுக்குள் வரக்கூடாது; அடாவடி மாமியாரிடம் சிக்கிய மருமகள் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 55

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Advocate santhakumaris valakku en 55

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ராதா என்கிற பெண் இரண்டாவது திருமணம் செய்தவர். என்னை பார்க்க வந்திருந்தார். ஆரம்பிக்கும் போதே தான் ஒரு ஐயர் பெண் என்று ஆரம்பித்தார். சாதியைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது என்றும், அது தன்னை எவ்வளவு பாதித்தது என்றும் சொல்ல வந்ததால் தான் குறிப்பிட்டு சொன்னேன் என்று தன் கதையை ஆரம்பித்தார். ராதா மூன்று டிகிரி வாங்கியவர், வேலை பார்க்கும் நல்ல திறமையானவர். முதல் திருமணம் தோல்வியில் முடியவே ஒரு சோர்வு வருகிறது. அதனால், தனியாக பெங்களூரில்தான் வேலை பார்த்து வருகிறார். 

அவளது பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பேசி சம்மதிக்க வைத்து தன்னை போலவே இரண்டாவதாக வரன் பார்க்கும் பையனை பார்த்து பேச பிடித்து போகிறது. அவர்கள் ஐயங்கார் பிரிவினர். எனவே நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம். ரொம்ப ஆச்சாரமாக இருப்போம் என்றும் தன்னுடய பெற்றோர் மிகவும் வயதானவர்கள். தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். எனவே தனிக் குடித்தனம் வரமுடியாது என்று சில கண்டிஷன் போடுகிறான். ராதாவும் குடும்பத்துடன்தான் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு ஒத்துக்கொண்டு மிக எளிதாக திருமணம் நடக்கிறது. 

வேலையும் விட சொல்கிறார்கள். அம்மா வீடு அதே சென்னையில் இருந்தாலும் அடிக்கடி போகக்கூடாது என்று வேறு சொல்லி விடுகிறார்கள். திருமணம் ஆகி போன நாளிலிருந்து வீட்டில் மாமியார் மிகவும் கெடுபிடி என்று புரிந்து கொள்கிறாள். அன்பாக பேசுவதே இல்லை. சமையல் அறையில் அவளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. குளித்த பின்னரே தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று உத்தரவு வேறு. மாமனார் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் போய் வர இருக்கும்போது மறைமுகமாக குத்திக் காட்டுவது என்று இருக்கிறது. காரணம், சாதி பிரிவில் தன்னை விட ஐயர் பிரிவினர் தனக்கு கீழே என்ற போக்கிலே அவளை நடத்துகிறார்கள். இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடியக்கூடாது என்று இவள் பொறுத்துப் போகிறாள். 

அந்தப் பெண்ணுக்கு, அளவான சாப்பாடே போடப்படுகிறது. மேலே பசித்தாலும் கிட்சனில் அனுமதி இல்லை. வெளியே வாங்கி கொள்ளவேண்டும் என்று கேட்டாலும், கணவன் அம்மாவிடம் பணம் கேட்டு கொள் என்கிறான். வீட்டிலே அடைந்து கிடக்க வேலைக்கு போக அனுமதி கேட்டதும் முதலில் கிடைக்கவில்லை. இவள் பார்க்கும் பார்மஸி வேலை சென்னையில் கிடைக்கவில்லை. ஒருநாள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் வீட்டை பூட்டி விட்டு குடும்பமாக சென்று விட்டு நெடு நேரம் இவளை வாசலிலே நிற்க வைத்து விடுகின்றனர். இதுபோல இனி நடக்காமல் இருக்க இன்னொரு சாவி மாமியாரிடம் கேட்டபோது அது இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாக ஆனது. இவள் மாதாந்திர மாதவிலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே அனுமதி இல்லை. அதனுடன் வேலைக்கு சென்று விட்டு வந்து இவர்கள் போடும் கண்டிஷனில் சிரமமாக தான் வாழ்கிறாள்.

பொறுக்க முடியாமல் இயலாமையால் இது போலதான் முதல் மனைவியையும் நடத்தினீர்களா? அதான் சென்றுவிட்டாளா? என்று கேட்டு விட, கணவன் தன் அம்மாவை எப்படி இது போல பேசலாம் என்று பேச்சாகி விட்டது. கணவனிடம் எதிர்பார்த்த அன்பு, அக்கறை எல்லாமே போய்விட்டது. இப்படியே ஒரு வருடம் போனது. பெங்களூரில் வேலை கிடைக்க சனி, ஞாயிறு மட்டுமே வீட்டிற்கு வருகிறாள். வந்திருக்கும் ஒருநாளில் சேர்த்து வைத்து கொடுமைகள் காட்டப்படுகிறது. கணவனிடமும் வாழ விடுவதில்லை. 

அந்தச் சமயம் எதிர்பாராதவிதமாக முதல் மனைவியின் சொந்தக்காரர் ஒருவரை, ராதா பெங்களூரில் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறாள். ஒருவரை ஒருவர் யார் என்று பகிரும்போது அவளுடைய கணவனின் முதல் மனைவியின் சொந்தக்காரர் என்று சொல்லி அந்த மாமியார் சேர்ந்து வாழவே விடமாட்டாள் என்கிறார். நாங்கள் கடைசியில் நாற்பது லட்சம் கொடுத்தோம் என்று சொல்லவும் இவளுக்கு பெரிய அதிர்ச்சி. எனவே சேர்ந்து வாழ வேண்டும் என்று பெட்டிஷன் போட்டு தனியாக வாழ வேண்டும் அல்லது வாரம் ஒரு முறை பெற்றோர் பார்க்க வரலாம் என்று கேட்டு பார்க்கிறாள். 

இந்தத் திருமணத்தை தக்க வைத்து கொள்ள பார்க்கிறாள். ஆனால் கணவன் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இருக்கிறான். மேலும், அவள் பயணம் செய்து வேலை பார்த்து திரும்புதலை காட்டி அவள் நடத்தையை சந்தேகமாக பேசுகிறான். நாங்கள் நிரந்தர ஜீவானாம்சம் கேட்டு பார்த்தோம். ஒரு பைசாக்கு கூட மறுத்தார்கள். இந்தப் பெண் வழக்குக்காக, பெங்களூரிலிருந்து சென்னை வந்து ரயில் நிலையத்தில் குளித்து என்று ரொம்ப சிரமப்பட்டாள். கவுன்சிலிங் வைத்தபோது கூட கணவன் தன் பெற்றோரைக் கூட்டி வரவில்லை. மீடியேஷன் போட்டு இறுதியாக ஐந்து லட்சம் ஒத்துக் கொண்டார்கள். ம்யூச்சுவல் கன்செண்ட் போட்டு கடைசியாக விவாகரத்து ஆனது.

Next Story

கணவனுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைத்த மனைவி; கதறிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 54

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
advocate-santhakumaris-valakku-en-54

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள். 

தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள். 

அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து  பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை. 

இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.