ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று (20/11/2022) தொடங்குகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.
1963- ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் பிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிப் பெற்றது இல்லை. இம்முறைப் போட்டிகளை நடத்துவதால், முதன்முறையாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. 20 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருக்கும் கத்தார் நாடு, உலகக்கோப்பை தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் எட்டு அரங்கங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நட்சத்திர விடுதிகள் என உலகையே வியக்கும் வண்ணம், ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இதன்மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடு என்ற பெருமையை கத்தாருக்கு கிடைத்திருக்கிறது. தொடக்க விழா இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்கிறார். அதன் பின்னர், நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, ஈகுவடாரை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி, இந்திய நேரப்படி 09.30 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இந்த தொடரில் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி வரும் டிசம்பர் 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.