Skip to main content

தங்கக்கனவுகளுடன் வரும் பெண்கள் சந்திக்கும் தடைகளும், சோதனைகளும்...

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

“ஐந்து முறை உலக சாம்பியன் வென்றவள் நான். ஆனால் இன்னும் எனக்கு பெரியளவில் ஸ்பான்ஸர் இல்லை. நம் நாட்டில் பெருநிறுவன ஊக்கமளிப்பு அரிதானது அல்ல. மற்ற விளையாட்டில் வீரர்களுக்கு கிடைக்கும் நிதியுதவி, எனக்கு கிடைக்காதபோது மிகவும் வருத்தப்படுகிறேன்" - இந்த வார்த்தைகளை உதித்தவர் விளையாட்டுத் துறையில் இந்திய மகளிரில் அதிகம் சாதித்த மேரி கோம். 

 

maricom

 

உலகளவில் குத்துச்சண்டையில் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த வீரருக்கே இதுதான் நிலைமை. அப்படியென்றால் மாவட்ட, மாநில அளவிலும், பள்ளி, கல்லூரிகளிலும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் பல வீராங்கனைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டியது அவசியம். 
 

2009-ஆம் ஆண்டு புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா வீராங்கனைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த உண்மையை ஊடகங்களின் முன் தெரிவித்தார். விளையாட்டு உலகில் பல வருடங்கள் சர்வதேச அளவில் விளையாடிய எனக்கே சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. அப்படியென்றால் புதிய வீராங்கனைகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்ற கேள்வியை எழுப்பினார் உஷா.

 

pt usha

 

பாலின வேறுபாடு, கிடைக்காத ஸ்பான்ஸர்கள், பாலியல் வற்புறுத்தல்கள், பாதுகாப்பின்மை என்ற பல பிரச்சனைகளை தாண்டிதான் மகளிர், விளையாட்டு உலகை நோக்கி அடியெடுத்து வைக்கின்றனர்.  சமூகம், உளவியல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மகளிரை அதிகம் பாதிக்கின்றன. பயிற்சியாளர்கள் மூலம் பாலியல் தொல்லை வருவது இன்றும் பல இடங்களில் நடைபெறுகிறது. 
 

சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவாதத்தை உருவாக்கி சில சாதிக்கும் பெண்களை முடக்கி விடுகின்றனர். உதாரணமாக, அவர்கள் அணியும் ஆடைகள் குறித்து விவாதம் பரப்பப்படுகிறது. அதிகாரிகள், தேர்வு குழுக்கள், பயிற்சியாளர்கள், அரசுகள் இன்னும் விளையாட்டுத் துறையில் பாலின சமத்துவமின்மையை கடைபிடித்து வருகிறார்கள். 
 

விளையாட்டுத் துறையில் பெண்கள் சிறு தவறு செய்யும்போது அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆனால் அவர்கள் சாதிக்கும்போது பெரியளவில் கண்டுகொள்வதில்லை. ஜூனியர்-சீனியர், பணபலம், அதிகாரபலம் போன்ற காரணிகள் வெகுவாக தகுதியான வீராங்கனைகளை தடுக்கிறது. ஜூனியர்களுக்கு திறமை அதிகமிருப்பினும் சீனியர்களின் ஆதிக்கம் இன்றும் விளையாட்டுகளில் கொடிகட்டி பறக்கிறது. 
 

இன்றும் நகரங்களில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அளவிற்கு கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டில் சாதிக்கும் பலருக்கு கிடைப்பதில்லை. பெரிய கல்வி நிறுவனங்களில் விளையாட்டில் ஓரளவு திறமை கொண்டவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் சிறிய கல்வி நிறுவனங்களில் முழுத்திறமை கொண்ட வீரர்களுக்கு அமைவதில்லை.  
 

எதிர்நீச்சல், கானா போன்ற படங்கள் விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக்கூறின. சக் தே இந்தியா போன்ற படங்கள் ஜூனியர்-சீனியர, ஈகோ பிரச்சனை போன்றவை எந்தளவிற்கு சர்வதேச அளவிலும் இருக்கின்றன என்பதை தெரிவித்தது. 
 

விளையாட்டு உலகில் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது அவர்களின் முயற்சிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் அதிகம். பெண்களால் பெரியளவில் சாதிக்க முடியாது என்று கூறிபவர்கள் ஏராளம். தோல்வியுறும் போது அவர்களின் கதை முடிந்தது என்பார்கள். வெற்றிபெறும் போது அமைதி காப்பார்கள் என்று விளையாட்டில் பெண்கள் சாதிக்கத் துணியும்போது சமூகம் அதை எவ்வாறு அணுகியது என்பதை பற்றி தன் வேதனையை தெரிவித்தார் மேரி கோம். 
 

பி.டி.உஷா, மிதாலி ராஜ், மேரி கோம், சாய்னா நேவால் ஆகியோரின் உலக சாதனைகள் எளிதாக படைக்கப்படவில்லை. அவர்கள் தன்னுடைய வாழ்வில் பல கடினமான சோதனைகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்துதான் இன்று உலகின் சிறந்த வீராங்கனைகளாக மாறியுள்ளனர். 
 

விளையாட்டில் சாதிக்க களமிறங்கும் வீராங்கனைகளின் உறுதியான தன்னம்பிக்கையை குறைப்பதற்காக மட்டுமே பல விமர்சனங்கள் வரும். விமர்சனங்கள், ஏழ்மை ஆகியவற்றை தாண்டி ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டி வருகின்றனர் பலர். அவர்களின் போராட்டங்களும், சாதனைகளும் வருங்கால தலைமுறைக்கு பெரிய நம்பிக்கையையும், மாற்றத்தையும் கொடுக்கும்.
 

“அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இன்று ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவிற்கு பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் சிகரங்களை அடைந்த பல திறமையான விளையாட்டு வீராங்கனைகளான மேரி கோம், மிதாலி ராஜ், சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு நாம் இன்னும் சரியான விதத்தில் அங்கீகாரம் அளிக்கவில்லை. 
 

சச்சின், கோலி, தோனி என்று பேசும் நாம் மந்தனா, ராணி ராம்பால், கீதா பகாட், தீபா கர்மகார் என்று பேசும்போதுதான் மகளிர் விளையாட்டும் அங்கீகாரம் பெரும். வாழ்க்கையில் பல விஷயங்களைப் போல, இதற்கான மாற்றமும் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டியது அவசியம்.