Skip to main content

வார்னர், பான்கிராஃப்டுக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதி!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய வார்னர் மற்றும் பான்கிராஃப்டுக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

warner

 

தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கொண்ட சுற்றுப்பயணம், பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைவடைந்தது. அதில் உச்சகட்ட பரபரப்பாக பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸி. அணியின் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. 
 

இந்தத் தடைக்குப் பிறகு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவந்த இந்த வீரர்கள், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஏற்கெனவே, ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்மித் கனடாவில் நடக்கவிருக்கும் குளோபல் டி20 தொடரில் களமிறங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருந்தது. 
 

இந்நிலையில், டார்வின் ஸ்டிரைக்ஸ் எனும் கீழ்மட்ட, அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் தொடரில், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை மாதம் முழுவதும் நடக்கவிருக்கும் இந்தத் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறும். அதேபோல், பான்கிராஃப்ட் மாதம் முழுவதும், வார்னர் ஜூலை 21, 22 தேதிகளில் மட்டுமே களமிறங்குவார் என்றும் தெரிகிறது. 
 

முதலில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்குவதற்கு தடை என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்மட்ட போட்டிகளில் இந்த வீரர்கள் விளையாட அனுமதித்திருப்பது அவர்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.