Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த குழுவில் கரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

tokyo olympics

 

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

 

கரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒலிம்பிக்கைக் காண உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் மைதானதிற்குள் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், 9 பேர் கொண்ட உகண்டா ஒலிம்பிக் குழு, கடந்த சனிக்கிழமை ஜப்பானுக்கு வந்தது. வீரர்கள், அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அந்த குழுவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பயிற்சியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.

 

இந்தநிலையில், உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை ஜப்பான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்டது வீரர்களுக்கா அல்லது பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கா என்பதை தெரிவிக்கவில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த குழுவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் அங்கம் வகிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.