Skip to main content

சிலருக்கு ஷார்ஜாவில் விளையாடுவதாக நினைப்பு.. அணி வீரர்கள் பற்றி ஸ்டீவ் சுமித் பேச்சு!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

Steve Smith

 

 

13-வது ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் கில் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

 

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, முன்னணி வீரர்களின் ஆட்டம் சொதப்பலாக அமைந்தது. பின்வரிசையில் களமிறங்கிய டாம் கரன், அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இது ராஜஸ்தான் அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களைக் குவித்த ராஜஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேசுகையில், "தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. சில வீரர்கள் இன்னும் ஷார்ஜாவில் விளையாடுவதாகவே நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த மைதானம் சற்று பெரியதாக இருந்தது. கணிப்பதற்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது. ஒரு அணியாக திட்டமிட்டபடி விளையாட தவறிவிட்டோம். 20 ஓவர் போட்டிகளில் இது நடப்பது இயல்பானது தான். அணியில் வீரர்கள் மாற்றம் குறித்து யோசிக்க இருக்கிறோம்" எனப் பேசினார்.