உலகக் கோப்பையின் 10 ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் சௌத் ஆப்பிரிக்கா இடையே நேற்று(12.10.2023) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சௌத் ஆப்பிரிக்கா அணிக்கு பவுமா,டி காக் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்திருந்த போது பவுமா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டி காக் சதமடித்தார். அடுத்து வேன் டெர் டஸ்சென் 26 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக்கும் 109 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்வரிசை வீரர்களில் மார்க்ரம் மட்டும் அரை சதம் அடித்து கை கொடுக்க, சௌத் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், ஜம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 312 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆஸி அணியில்ம் தொடக்க ஆட்டக்காரரான மார்ஸ் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் நேற்றும் 7 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த வேளையில் 70-6 என்ற இக்கட்டான சூழ்நிலையில் தவித்தது.
இரட்டை இலக்கத்தை தாண்டுமா என நினைத்த வேளையில் லபுசேன், ஸ்டார்க் இணை ஓரளவு நிலைத்து ஆட 100 ரன்களை கடந்தது ஆஸ்திரேலிய அணி. ஸ்டார்க் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சௌத் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மகாராஜ், சம்ஷி, ஜான்சென் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், இங்கிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது சதமடித்த டி காக்குக்கு வழங்கப்பட்டது. சௌத் ஆப்பிரிக்க அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியது. 5 முறை உலக சாம்பியன் அணியா என்று கேட்கும் அளவுக்கு ஆஸி அணியின் பீல்டிங், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு படு மோசமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்ச்சுகளை தவற விட்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட் அதிகம் பெற்று, சௌத் ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.