டிவில்லியர்ஸை பின்வரிசையில் களமிறக்கியது தொடர்பான விராட் கோலியின் முடிவு குறித்து சேவாக் கேள்வியெழுப்பியுள்ளார்.
13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 31-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ், நேற்றைய போட்டியில் ஆறாவது விக்கெட்டிற்கு களமிறங்கினார். இது பெங்களூரு அணி ரசிகர்களைக் குழப்பமடையச் செய்தது. இடது கை, வலது கை பேட்ஸ்மேன்களை சரியான கலவையில் இறக்க வேண்டும் என்று திட்டமிட்டும், லெக் ஸ்பின்னர்களை திறம்படச் சமாளித்து விளையாடுவதற்காகவும் டிவில்லியர்ஸை பின்வரிசையில் களமிறக்கினோம் என விராட் கோலி விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் விராட் கோலியின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், "இதே மைதானத்தில் கடந்த போட்டியில் டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அவருக்கு கூடுதலான பந்துகளை எதிர்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், கூடுதலான ரன்கள் குவித்திருப்பார். வலது கை, இடது கை என பேட்ஸ்மேன்கள் கலவை பற்றி விராட் கூறுகிறார். ஆனால், தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்த போது, விராட் கோலி களமிறங்கினார். அப்போது வலது கை, இடது கை என பேட்ஸ்மேன்கள் கலவை பற்றி யோசிக்கவில்லையா" எனக் கேள்வி எழுப்பினார்.