சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை கடந்த 25ஆம் தேதி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று (26-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி கால் பண்ணி தகவலை தெரிவிக்கிறார். அதை வைத்து போலீஸ் டீம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செல்லும் போது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH) டீம் கமிட்டியினுடைய பேராசிரியரும், பாதிக்கப்பட்ட மாணவியும் புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை வைத்து எஃப்.ஐ.ஆர் போடுகிறோம். அந்த எஃப்.ஐ.ஆரில், பாதிக்கப்பட்டவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை எழுத வேண்டும். அதில், போலீஸ் எந்த திருத்தமும் செய்யக் கூடாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமரா இருக்கிறது. இதில், 56 சிசிடிவி கேமரா வேலை செய்கிறது. அதில் இருந்து வந்த தகவலை வைத்தும் தான் நாங்கள் குற்றவாளியை பிடித்திருக்கிறோம். அந்த பல்கலைக்கழகத்தில் 140 பேர் செக்யூரிட்டி இருக்கிறார்கள். அதில் 49, 49, 42 என மூன்று ஷிப்டாக போட்டு அந்த செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, ஞானசேகரைன் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த மாதிரி எந்த தகவலும் கிடையாது” என்று கூறினார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (27-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் (POSH) கமிட்டியில் இருந்து அப்படிப்பட்ட புகார் வரவில்லை என்பது தான் எங்களுக்கு கிடைத்த சங்கடமான செய்தி. ஒரு வேளை, மனுதாரர் அந்த புகார் தராமல் இருந்து அந்த குழுவுக்கு யார் மூலமாகவோ செய்தியாக வந்திருந்தால் கூட அழைத்துப் பேசி நாங்கள் தீர்வு காண வாய்ப்பு இருந்திருக்கும். காவல்துறைக்கு புகார் மனு சென்ற பிறகு, பல்கலைக்கழகம் அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையில், நானும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். கைது செய்யப்பட்டிருக்கிறது, விசாரணை தொடர்கிறது. இதற்கிடையில், மகளிர் தேசிய ஆணையம் இந்த வழக்கில் உள் நுழைந்து விசாரிக்க முற்படுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும், தமிழக அரசு, பல்கலைக்கழகமும், உயர்கல்வித்துறையும் முழு ஒத்துழைப்பு தரும்.
சிசிடிவி கேமரா நுழைவு வாயிலிலும், மாணவர் - மாணவியர் விடுதியிலும், தங்கி சாப்பிடக் கூடிய உணவகத்திலும், சாலைகளிலும் பெரும்பாலும் பொருத்தப்பட்டு 100க்கு 80 சதவீதம் சரிவர தான் இருக்கிறது. 10,20 குறைபாடுகள் உண்டு. அந்த தவறு இடத்திற்குள் சிசிடிவி கேமரா இல்லை தான்.
சம்பவம் நடந்த நேரம் 8 மணி. குற்றவாளியான அந்த நபர், பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்துபோகும் பழக்கத்தையும் பெற்றிருக்கிறார். இதை வாயில் காப்பாளர்கல் சொல்லி இருக்கிறார்கள். முழு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது மனைவி கூட, அந்த பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரமில்லாத பணியில் ஆற்றிக் கொண்டிருப்பார். வருவார்கள், போவார்கள் என்ற நிலையில் தான் சந்தேகப்பட்டு இவரை உள்ளே வராதே என்று சொல்லுகிற சூழல் இல்லாத நிலை இருந்திருக்கிறது” என்று கூறினார். புகார் கொடுத்தது யார்? சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இருக்கிறதா? ஞானசேகரனின் மனைவியின் வேலை என காவல் ஆணையர் அருண், அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.