கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியின் முன்னாள் வீரர் கோப் பிரைன்ட். சர்வதேச அளவில் கூடைப்பந்தாட்டத்தின் ஜாம்பாவானாக வலம் வந்த இவர், தொடர் காயங்கள் காரணமாக 2016ஆம் ஆண்டு சர்வதேச கூடைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்கு பிறகு பயிற்ச்சியாளராக பணி செய்து வந்த கோப் பிரைன்ட், தனது 13 வயது மகள் ஜியானாவுடன், நேற்று கலிபோர்னியாவிலுள்ள ஒரு கல்லூரி அணிக்கு பயிற்சியளிப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கலபாசஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோப் பிரைன்ட், அவரது மகள் ஜியானா உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 ஆண்டுகள் கூடைப்பந்தாட்ட ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்த கோப் பிரைன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.