Skip to main content

தண்டனையிலிருந்து தப்பிய நரேந்திர மோடி மைதானம்!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

NARENDRA MODI STADIUM

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி, இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் ஓரளவிற்கு சமாளித்தாலும், அஸ்வின், அக்ஸர் படேல் இருவரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

இதையடுத்து, இந்தப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் பிட்ச்சை, இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலர் விமர்சித்தனர். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், பிட்ச் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இந்தநிலையில் இந்தப் பிட்ச் குறித்து ஆராய்ந்த சர்வதேச கிரிக்கெட் வாரியம், மைதானத்தை 'சராசரி' என மதிப்பிட்டுள்ளது.

 

ஒருவேளை சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்த மைதானத்தை தகுதியற்றது என மதிப்பிட்டிருந்தால் தற்போதைய விதிகளின்படி இந்த மைதானத்திற்கு ஐந்து புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு ஐந்து புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தால் 12 மாதங்களுக்கு இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் எதையும் நடத்த முடியாது. தற்போது சராசரி என மதிப்பிடப்பட்டிருப்பதால் நரேந்திர மோடி மைதானம் தடையிலிருந்து தப்பித்துள்ளது.