Skip to main content

தடைகளை உடைத்தெறிந்து மாஸ் கம்பேக் கொடுத்த முஹமது சமி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி விளையாடி வந்தது டெல்லி அணி. ரிஷப் பண்ட் மற்றும் இன்கிராம் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 17-வது ஓவர் வீச வந்த சமி டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்டை கிளீன் போல்ட் ஆக்கினார். மேலும் அந்த ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். சமியின் இந்த ஓவர் ஆட்டத்தை பஞ்சாப் அணியின் பக்கம் கொண்டு வந்தது. 

 

mohammed shami

 

பின்னர் 18-வது ஓவரில் சாம் கரன் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டும், ஒரு விக்கெட் மற்றும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்த சமியின் 19-வது ஓவரும் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தது. கடைசி 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது டெல்லி.  
 

அடுத்தடுத்து காயங்கள், மனைவியுடன் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை, ஃபிட்னஸ் டெஸ்டில் தகுதி பெறாதது என தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வந்தார் சமி. கடின உழைப்பு, தளராத நம்பிக்கை, அளவில்லாத பயிற்சி ஆகியவற்றின் மூலம் அணியில் மீண்டும் இடம்பிடித்து இன்று பவுலிங்கில் கலக்கி வருகிறார் சமி.
 

சமி உத்தரப்பிரதேச மாநிலம் அமரோவிலுள்ள சஹஸ்பூர் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை டூசிஃப் அலி ஒரு விவசாயி. 2005-ஆம் ஆண்டு சமியின் அசத்தும் பந்து வீசும் திறனைக் கண்டு மொராதாபாத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளர் பத்ருதின் சித்திக்கிடம் அழைத்துச் சென்றார் சமியின் தந்தை. 15 வயதே ஆன சமியின் சிறப்பான பந்துவீச்சைக் கண்டு வியந்த பத்ருதின் சித்திக் சமிக்கு பயிற்சியளிக்க முடிவு செய்தார். இது தான் சமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றம். 
 

2013-ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடி வருகிறார் சமி. காயமும் அவரை பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு விளையாடிய பெரும்பாலான தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். 2015-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 17 விக்கெட்கள் வீழ்த்தினார்.  
 

mohammed shami

 

காயத்தில் இருந்து விடுபட்டு 2018-ல் அணிக்கு திரும்பினார். 2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 15 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்கள் எடுத்து கலக்கினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற பந்து வீச்சில் முக்கிய பங்கு வகித்தார். 
 

இர்ஃபான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய சாதனையை 56 போட்டிகளில் சமி வீழ்த்தி குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெல்ல உதவிய சமி, தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார்.   
 

உள்நாட்டைவிட வெளிநாடுகளில் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார் சமி. புவனேஷ் மற்றும் பும்ரா ஆகிய இருவரை தவிர நம்பிக்கையான ஃபாஸ்ட் பவுலர் இல்லாத நிலையில் இந்திய அணி இருந்தபோது மாஸ் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார் சமி. இங்கிலாந்து மைதானங்களில் 4 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்கள், எகனாமி ரேட் 4.68, பவுலிங் சராசரி 19. லைன் & லென்த், வேகம், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றின் மூலம் 2019 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி தருவார் என்று எதிர்பார்க்கலாம்.