ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய வீரர் முன்னாள் கேப்டன் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட அவர், அந்த அணியின் பங்குதாரராகவும், சென்னை ரசிகர்களுடன் உணர்வு ரீதியாக ஒருங்கிணைந்தவராகவும் மாறிவிட்டார்.
கிட்டத்தட்ட 11 சீசன்கள் நிறைவடைந்துவிட்டன. ஒவ்வொரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், சென்னைக்கும் தோனிக்குமான உறவு என்பது அப்படியே இருக்கிறது. இது ஒருபுறமிருக்க தோனி எங்கள் அணிக்காக விளையாடினால் நன்றாக இருக்கும் என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் கடந்த ஆண்டு கூறியிருந்தார். பஞ்சாப் அணியின் உரிமையாளராக ப்ரீத்தி ஜிந்தாவும் பலமுறை இதே கருத்தைக் கூறியிருக்கிறார்.
தற்போது, 2008ஆம் ஆண்டிலேயே தோனியை பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்காமல் விட்டுவிட்டேனே என ப்ரீத்தி ஜிந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நான் தோனியின் தீவிர ரசிகை எல்லாம் கிடையாது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக அவரது ஆட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இந்திய கேப்டன்களிலேயே அவர் மிகவும் சிறந்தவர். அவரது வயதுகுறித்து அடிக்கடி விமர்சனங்கள் எழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அதெல்லாம் தனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயமெல்லாம் அவருக்குக் கிடையாது. ஏனெனில், களத்தில் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை அவர் எப்போதுமே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.