ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் மட்டுமல்ல உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுலே களமிறங்குவார் என இந்திய அணியின் ரோஹித் சர்மா கூறினார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனும் தென் ஆப்பிரிக்கா அணியுடனும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடப்போகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் விராட் கோலியே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, “அடுத்து நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் மட்டுமல்ல உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுலே களமிறங்குவார். இந்திய அணிக்கான கே.எல்.ராகுலின் பங்கு சரியாக கவனம் பெறுவதில்லை. ஓரிரு போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனில் முந்தைய சாதனைகள் எல்லாம் மறைந்து விடாது. ஆசிய கோப்பையில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மாற்று தொடக்க ஆட்டக்காரராக விராட் இருப்பார்” என கூறினார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சமிக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.