Skip to main content

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தோனி & கோ-வின் பலவீனமான மிடில் ஆர்டர் பேட்டிங்...

Published on 03/10/2018 | Edited on 04/10/2018

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணியுடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போராடி வென்றது இந்திய அணி. இறுதிப் போட்டியில் விளையாடிய வங்கதேச அணியில் தமீம் இக்பால், ஷகிப் உல் ஹசன் மற்றும் ஷபிர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லை. இந்த நிலையில் 222 ரன்களை எடுக்கக்கூட வங்கதேசத்துடன் போராடி வென்றது இந்தியா. இறுதிப் போட்டிக்குப் பிறகு ரசிகர்களிடமும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன. 
 

dd

 

 

மிடில் ஆர்டரில் தோனியைத்தவிர மற்ற வீரர்களுக்கு நல்ல அனுபவம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். 4-7 இடங்களில் விளையாடும் வீரர்கள் பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றனர். அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, அம்பதீ ராய்டு, கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்தர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். 

 

dd


 

2015-உலக கோப்பைக்குப் பின்னர் இந்திய அணி 62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். இந்திய அணியின் மொத்த ரன்களில் 50 சதவிகதத்துக்கும் மேற்பட்ட ரன்கள் டாப் 3 பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்கள். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சராசரி  60-க்கு மேல் உள்ளது. 2015-உலக கோப்பைக்குப் பின்னர் மிடில் ஆர்டர்  பேட்ஸ்மேன்களின்(4-7) சராசரி 35 தான். 

 

dd

 

இந்த வருட ஆசிய கோப்பை தொடரில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 5 போட்டிகளில் 2 சதம் உள்பட 342 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்ததாக  கேப்டன் ரோஹித் ஷர்மா 5 போட்டிகளில் 2 அரை சதம், ஒரு சதம் உள்பட 317 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மற்றபடி மிடில் ஆர்டரில் சொல்லும்படி யாரும் சரியாக விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு புதியது அல்ல. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா தொடர்களிலும் இதே நிலைதான். 
 

dd

 

 

தற்போது உள்ள நிலையில் உலக கோப்பை போட்டிக்கு 4 மற்றும் 6-வது இடங்களை யார் நிரப்புவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக், அம்பதீ ராய்டு, மனீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் 4-வது இடத்தை நிரப்பலாம். ஆனால் மனீஷ் பாண்டேவும், ஸ்ரேயஸ் ஐயரும் கடந்த சில தொடர்களில், ஆடும் 11 பேரில் தேர்வாகவில்லை. 6-வது இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது ஜடேஜா விளையாட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிய அளவு பங்களிப்பை வழங்குவதில்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அவருடைய பேட்டிங் சில காலங்களாக பெரிய அளவில் சிறப்பாக இல்லை என்பதே உண்மை.


       
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பங்களிப்பால் வெற்றி பெற்றதாக சமீப காலங்களில் எந்தவொரு போட்டியும் இல்லை. அதேசமயத்தில் மிடில் ஆர்டர் சொதப்பலால், வெற்றி பெறக்கூடிய போட்டிகளில்கூட தோல்வியடைந்துள்ளது. இதைக்கூடிய விரைவில் சரிசெய்ய வேண்டிய  நிலையில் இந்திய அணி உள்ளது.