நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வைட்வாஷ் செய்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் சதமும், ஷ்ரேயஸ் ஐயர் அரைசதமும் அடித்தனர். 50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் குவித்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய நியூஸிலாந்து அணி, 48 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வைட்வாஷ் செய்துள்ளது.
இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் கடைசியாக தோற்றது 1989 மார்ச் மாதம் ஆகும். மேற்கிந்திய தீவுகளிடம் திலீப் வெங்சர்கர் தலைமையிலான இந்திய அணி பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது மற்றும் முன்றாவது போட்டியில் இந்திய அணியை விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நான்காவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ஐந்தாவது ஒருநாள் போட்டியை 101 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. அதன்பின்னர் இந்தியா வைட்வாஷ் செய்யப்பட்டது இப்போதுதான்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா உடன் நடைபெற்ற தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தாலும், 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு ஆட்டம் நடைபெறவில்லை. எனவே அதனை வைட்வாஷாக கருத முடியாத சூழலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்திய அணி மீண்டும் வைட்வாஷ் ஆகியுள்ளது.