Skip to main content

ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒரு நாள் போட்டி ; இந்தியா பந்துவீச்சு தேர்வு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

 India-Australia One Day Match Begins Today!

 

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியது. உலகக் கோப்பை 2023 நெருங்கி வரும் சூழலில் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இந்தியாவின் முதல் போட்டி, சென்னை, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. 

 

இதற்கு முன்னதாக, இந்தியா-ஆஸ்திரேலியா இரு அணிகளும் பங்கேற்கும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஆட்டம் மொஹாலியில் தொடங்கியது. இரண்டாவது ஆட்டம் இந்தூரில், ஹோல்கர் ஸ்டேடியத்தில் 24ம் தேதியும், இறுதி ஆட்டம் 27ம் தேதி ராஜ்கோட், சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு முன் இந்த தொடரின் வெற்றியானது உத்வேகத்தை கொடுக்கும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

 

தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, விராத் கோலி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறவில்லை. எனவே, முதல் இரண்டு ஆட்டத்தை கே.எல்.ராகுல் வழி நடத்தவுள்ளார். இந்த மூன்று நாள் ஒடிஐ தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே, அக்சர் படேல் காயம் காரணமாக ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாட முடியவில்லை. ஒருவேளை, அவருக்கு உடல் நிலை சரியாகும் பட்சத்தில் இத்தொடரின் இறுதி போட்டியில் எதிர்பார்க்கலாம். மறுமுனையில், ஆஸ்திரேலியா சமீபத்தில் தான் தனது தென் ஆப்ரிகாவுடன் மூன்று டி20க்களையும், ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நிறைவு செய்தது. அந்த தொடரின் டி20 போட்டியை 3-0என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது. ஆனால், அடுத்து நடந்த ஒரு நாள் போட்டிகளில் நிலைமை சற்று மாறி, 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பரிக்க வெற்றிபெற்றது. ஜனவரி 2022 க்குப் பிறகு அஷ்வின் ஒருநாள் அணிக்கு திரும்பி உள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கில் இறங்க உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க்குக்கு மட்டும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மொஹாலியில் தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஸ், வார்னர் களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்த நிலையில் மார்ஸ் சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஸ்மித், வார்னருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த வார்னர் 52 ரன்களில் வெளியேறினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் 41 ரன்களில் சமி பந்து வீச்சில் க்ளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி 25 ஓவரில் 126 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. க்ரீன் 4 ரன்களுடனும், லபுஷேன் 19 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.