இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது. மேலும் அவரது இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கங்குலிக்கு அளிக்கப்படவுள்ள சிகிச்சைகள் குறித்து, ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று அவரது குடும்பத்தாரோடு ஆலோசனை நடத்தியது.
இதனைத்தொடர்ந்து, கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில், கங்குலி தற்போது சீராகவுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது அவசியம் என்றாலும், அவர் தற்போது சீராகவும், இதயத்தில் வலி இல்லாமலும் இருப்பதால், சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்குப் பிறகோ ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் என மருத்துவக் குழு முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், வரும் புதன்கிழமை கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கங்குலி உடல்நிலை குறித்து ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழு நடத்திய ஆலோசனையில், புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர்கள், தேவி ஷெட்டி, ஆர்.கே பண்டா ஆகியோர் இணையம் வாயிலாகவும், அமெரிக்கா நிபுணர் தொலைப்பேசி மூலமாகவும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.