கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்கால தடை விதித்து இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. மேலும் பி சாம்பிள் சோதனை செய்யப்படும் எனவும், அதில் கோமதி தோல்வியடைந்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கோமதி மீதான இந்த புகாரை அவரும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோமதி கூறுகையில், "நான் ஊக்க மருத்து எடுத்திருப்பதாக சொல்கின்றனர். அந்த மருந்தின் பெயர் கூட எனக்குத் தெரியாது. புதிய புதிய பெயர்களை சொல்கின்றனர். அதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை, அதனால் நம்பிக்கையுடன் உள்ளேன். பி சாம்பிள் முடிவுக்காக காத்திருக்கிறேன். அந்த முடிவில், எனக்கு எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.