கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடரானது இந்த மாதம் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் சென்னை அணிக்கு தற்போது பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஒரு பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை அணி வீரர்கள் முழுவீச்சுடன் பயிற்சியில் ஈடுபடுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. பின் சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணி அறிவித்தது. ரெய்னாவின் விலகல் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "கடந்த ஒரு வருடமாக தோனி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. ரெய்னா இல்லாத காரணத்தால் 3வது இடத்தில் களமிறங்கி விளையாட தோனிக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நிறைய பந்துகளை எதிர்கொண்டு, அவருடைய கடந்த கால ஆட்டம் போல ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அந்த இடத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரையே களமிறக்க வேண்டியிருக்கும். அது தோனியாகவே இருக்கலாம் என்பது எனது பார்வை" என்றார்.